சஜித்திற்கு ஆதரவு – சுமந்திரன் எடுத்த முடிவு செல்லுபடியற்றதா?: தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவுக்குள் பிளவு

சஜித்திற்கு ஆதரவு – சுமந்திரன் எடுத்த முடிவு செல்லுபடியற்றதா?: தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவுக்குள் பிளவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது.

எனினும், தீர்மானம் எடுக்கப்பட்டபோது மத்திய குழுவில் 18 பேர் மாத்திரமே சமூகளமளித்திருந்ததாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று இரவு ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

இதனால் தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் செல்லுபடியற்றது எனவும் மாவை சேனாதிராஜா கூறியிருக்கிறார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் தொடர்பாகக் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிட தமிழ் பொது வேட்பாளரை நியமிக்க சில தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் எடுத்த தீர்மானத்திற்கு தமிழரசுக் கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவருக்கு ஆதரவான சில உறுப்பினர் எதிர்ப்பு வெளியிட்டிருக்கின்றனர்.

எவ்வாறாயினும், தமிழரசு கட்சியில் சுமந்திரனை மையப்படுத்திய சில உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்திற்கு சஜித் பிரேமதாச நன்றி கூறியதுடன், “நாம் அனைவரும் ஒன்றாக, வெற்றிபெறும் எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க முடிவெடுப்பதற்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேறு சில முக்கிய வேட்பாளர்களை சந்தித்திருந்தது.

முன்னதாக கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணம் சென்று மதத் தலைவர்களை சந்தித்திருந்த சஜித், நல்லூர் கோவிலுக்கு விஜயம் வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

எவ்வாறாயினும், நேற்றைய கூட்டத்தில் தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், சார்லஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

இதனிடையே, நேற்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனக்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்து கட்சியின் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் தலைமை இன்றி எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் கண்டிக்கத்தக்கது என அந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், கொழும்பு கிளை தலைவருமான சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This