ஜனாதிபதி தேர்தலில் முன்னணி வேட்பாளர்களை தோற்கடித்த கே.கே.பியதாச: 47,543 வாக்குகளை பெற்றது எப்படி?
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான கே.கே.பியதாச, சில முன்னணி வேட்பாளர்களை தோற்கடித்து ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்.
தொலைக்காட்சி உரைகள், தேர்தல் கூட்டங்கள், கட்அவுட்கள் அல்லது துண்டுப் பிரசுரங்கள் எதுவுமின்றி 47,543 வாக்குகளை (0.36%) அவர் பெற்றுள்ளார்.
இதன்மூலம், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க உட்பட பல அரசியல்வாதிகளை அவர் தோற்கடித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் உள்ள கணிசமாக வாக்காளர்களின் ஆதரவைக் பெற்றுள்ளார்.
பொலன்னறுவை தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் அவர் 1000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எனது வணிகத்தின் ஒரு பகுதியாக வடக்கு மற்றும் கிழக்கிற்கு அதிக அளவில் பயணம் செய்த ஒருவன்.
நான் இன, மத, வேறு வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்தும் மனிதன் என்பதை எனக்கு வாக்களித்த மக்கள் அறிவார்கள் என கே.கே.பியதாச கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தின் ஹக்மன கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதிலிருந்தே நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு 1971ஆம் ஆண்டு நுவரெலியாவில் குடியேறத் தீர்மானித்தார்.
“எனது சிறு வயதிலிருந்தே டட்லி சேனாநாயக்கவின் தீவிர அபிமானியாக இருந்து அரசியலில் ஆர்வம் காட்டினேன்.
அடிமட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன், மாவட்டத்தின் முன்னணி அரசியல்வாதிகளான காமினி திசாநாயக்க, அனுர பண்டாரநாயக்க, எஸ்.தொண்டமான் ஆகியோருடன் பழகினேன்” என்றார்.
அவர் 1994 இல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார், மத்திய மாகாண சபைக்குபோட்டியிட்டு அதன் எதிர்க்கட்சித் தலைவரானார்.
2001ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 54,206 வாக்குகளைப் பெற்று முதன் முதலாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
2004 இல் நடந்த திடீர் பொதுத் தேர்தலில் பியதாச போட்டியிட்டு தனது ஆசனத்தை இழந்தார். 2010ஆம் ஆண்டிலும் தோல்வியடைந்தார், 2015 பொதுத் தேர்தலில் மாவட்டத்தில் 48,365 வாக்குகளைப் பெற்றார்.
“நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் நுவரெலியா மக்களுக்கு என்னால் இயன்றளவு உதவி செய்துள்ளேன். ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்டவும், மின் இணைப்பு பெறவும் உதவி செய்துள்ளேன்,” என்றார்.
தனக்கு இருக்கும் தமிழ் புலமை மாவட்டத்தில் உள்ளவர்கள் உட்பட பலருடன் தொடர்பு கொள்ள உதவியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், 75 வயதான அவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே கடைசித் தடவை என்று கூறுகிறார்.
“ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பலரைப் பார்த்த பிறகு நான் போட்டியிட நினைத்தேன்,” என்று அவர் கூறினார்,
தேர்தலில் போட்டியிட்ட மற்றவர்களை விட தனக்கு கிடைத்த அதிக வாக்குகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மகிழ்ச்சி அளிக்கிறது.” என அவர் மேலும் கூறியுள்ளார்.