பொது வேட்பாளருக்கு தகுதியான ஒருவரை சொல்லுங்கள் பார்ப்போம்

பொது வேட்பாளருக்கு தகுதியான ஒருவரை சொல்லுங்கள் பார்ப்போம்

அரசியலில் தீவிரமாக செயற்படுபவர்களில் பொது வேட்பாளருக்கு தகுதியான ஒருவரை முதலில் சொல்லுங்கள் பார்ப்போம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களிற்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தேடிவந்த வாய்ப்புக்களை நாங்கள் தவறவிட்டுள்ளோம். இலங்கை வரலாற்றில் சிங்கள தலைவர் ஒருவர் சமஸ்டியை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டபோது, வாக்களிக்க வேண்டாம் என தூண்டிய இப்பொழுது உள்ளகட்சிகள்தான் அப்பொழுதும் இருந்துள்ளன.

மக்களிற்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறிவிட்டீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் தகுதியோடு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. 22 பேரும் எவ்வாறு பாராளுமன்றம் வந்தார்கள், சமஸ்டியை முன்வைத்து போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளருக்கு என்ன நடந்தது என்பதை அறிவோம்.

48 வீதம் சமஸ்டியை முன்வைத்து போட்டியிட்டவர் பெற்றிருந்தார். அது இலங்கை வரலாற்றில் நடக்காத விடயம். குற்றவாளிகள்தான் தக்களுடைய ஊத்தைகளையும், குற்றங்களையும் மறைப்பதற்கு புதிதாக கண்டுபிடித்தது போல தனி வேட்பாளரை பிரேரிக்கின்றார்கள்.

அரசியலில் தீவிரமாக செயற்படுபவர்களில் அதற்கு தகுதியான ஒருவரை முதலில் சொல்லுங்கள் பார்ப்போம். அவ்வாறு மக்கள் மத்தியில் தகுதியானவர்கள் எல்லோரும் ஒதுங்கி இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் வேட்பாளர் ஒருவரை போட வேண்டும் என்ற கருத்துக்கு நான் மாறாக உள்ளேன்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பேசும்போது என்னைப் போன்றோரின் ஆலோசனைகளை பெறுவதில்லை. இவ்வாறான முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசும்போது அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளை பெற வே்ணடும். அவ்வாறு பெறுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் எனது அரசியல் சுத்தமாகவே உள்ளது.

2005ம் ஆண்டு முதல் தடவையாக சமஸ்டியை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட்டார். அந்த நேரத்தில் அவருக்கு மாறாக செயற்பட்டு அல்லது மக்களை தூண்டிவிட்டு அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னீர்கள்.

விடுதலைப்புலிகளை மறைமுகமாக தோற்கடிக்கும் நோக்கத்தோடு, யார் விடுதலைப்புலிகளை அழிப்பேன் என்று யாழ்ப்பாணத்தில் ஆரூடமிட்டாரோ அவரை ஆதரித்தீர்கள். கடந்த கால வரலாற்றை பார்க்கின்ற போது நீங்கள் பதவிக்காகவும், பலவித நன்மைகளிற்காகவும் உங்களிற்காக உழைத்தீர்களேயன்றி, மக்களிற்காக உழைக்கவில்லை.

மக்களிற்கு 2005ம் ஆண்டு கிடைத்த வாய்ப்பை தடுத்த நீங்கள் யாரும் அரசியலில் இருக்க தகுதியற்றவர்கள். அந்த தேர்தலில் சிங்கள மக்கள் 48 வீதம் வாக்களித்திருந்தார்கள். எமது மக்களை 2 வீதமாவது வாக்களிக்க விட்டிருந்தால் இன்று சமஸ்டி ஆட்சி இருந்திருக்கும்.

இவர்களில் யாரேனும் ஒருவர் தனது தகுதியை வைத்து தனது வரலாற்றை வெளியிடட்டும் பார்ப்போம். என்னைப்பொறுத்தவரையில் மக்களை ஏமாற்றுகின்றார்கள். 3 லட்சம் மக்களை காப்பாற்றுங்கள் என்று நான் கூறியபோது நீங்கள் வெளிநாடுகளில் இருந்தீர்கள்.

நான் மீண்டும் மீண்டு அந்த மக்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டேன். ஒருவரும் வாய் திறக்கவில்லை. இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வரச்சொன்ன போது நீங்கள் போகவில்லை. அவ்வாறு கடந்த நாட்களில் மக்களை கொண்டு சென்று நடுக்கடலில் தள்ளிவிட்டு, இன்று கரம் நீண்டுகின்றீர்கள். உங்களால் அரசியல் செய்ய முடியாது ஒதுங்கினால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This