தமிழரை மண்டியிட வைக்கும் ”தமிழரசு”; சுமந்திரன் யார் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்

தமிழரை மண்டியிட வைக்கும் ”தமிழரசு”; சுமந்திரன் யார் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்

ஏக்கிய ராஜ்ஜியவில் சமஷ் டி இருக்கிறது என தமிழ் மக்களை ஏமாற்றிய சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கிவிட்டு மக்களுக்கு பொய் விளக்கம் கூறுவார் என தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ் காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சுமந்திரன் என்பவர் யார் என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் .நல்லாட்சி அரசாங்கத்தில் ஐ.நா.வில் கால அவகாசம் பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தர் தலைமையிலான அணியில் சுமந்திரன் அரசாங்கத்தை காப்பாற்றினார்.

அது மட்டுமல்லாது புதிய அரசியல் அமைப்பை உருவாக்குகிறோம் எனக் கூறிக்கொண்டு ஏக்கிய ராஜ்ஜியவில் சமஷ்டி இருக்கிறது என மக்களுக்கு பொய்களை கூறிவந்தவர்.

அதேபோன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை திசை திருப்பி இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்புக்கு தமிழ் மக்கள் உள்ளக விசாரணையை வலியுறுத்தி போராட்டம் செய்தார்கள் என பாராளுமன்றத்தில் தெரிவித்தவர்.

அப்போது எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் தெளிவாகஎமது போராட்டம் சர்வதேச விசாரணையை கோரி இடம்பெற்றதே அல்லாமல் உள்ளக விசாரணையை கோரி இடம்பெறவில்லை என அழுத்தம் திருத்தமாக கூறினார்.

இவ்வாறு பொய்களை உரைத்த சுமந்திரன் தற்போது தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வினை கேட்கும் நிலையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கொண்ட சஜித் பிரேமதாசாவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்குவதாக சுமந்திரன் அறிவித்திருக்கிறார்.

தமிழ் மக்களிடம் சமஷ்டித் தீர்வை முன் வைப்போம் என தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை ஆட்சி சிங்கள வேட்பாளருக்கு ஆதரவை வழங்கியமைக்கு ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு என பொது வெளியில் கூறிக் கொண்டாலும் பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் தமிழ் மக்களை நேசிப்பவர்களாக இருந்தால் தமிழ் தேசியத்துக்கு எதிராக செயல்படுபவர்களை உதறிவிட்டு தனித்து பாராளுமன்றத்தில் இயங்காதது ஏன் எனக் கேட்க விரும்புகிறேன்.

இந்த ஏமாற்றத்தின் ஒரு பகுதியாக தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கி தமிழ் மக்களின் தாயகம் தேசியம், சுய நிர்ணய உரிமையை ஒற்றை ஆட்சியின் கீழ் மண்டியிட வைப்பதற்கான முயற்சியாக சஜித்தை ஆதரித்துள்ளனர்.

ஏற்கனவே புதிய அரசியலமைப்புக்கான வேலைத்திட்டங்கள் முடிவுற்ற நிலையில் அதனை நிறைவேற்றுவதற்கான முன்னேற்பாடாக தெற்கு கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளனர் என்றார்.

CATEGORIES
Share This