எரிமலை அருகே விழுந்து நொருங்கிய ஹெலிகாப்டர்; 22 பேரும் உயிரிழப்பு
22 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா ஹெலிகாப்டர் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் எரிமலை அருகே விழுந்து நொருங்கியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதன்படி, 17 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வித்யாஸ்-ஏரோவால் இயக்கப்பட்ட ஹெலிகாப்டர் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றதாக ரஷ்ய செய்தி நிறுவனங்களான TASS மற்றும் Interfax ஆகியவை தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு மலைப்பாங்கான பகுதியில் ஹெலிகாப்டரின் எச்சங்களை மீட்புக்குழுவினர் கண்டறிந்தனர்.
மோசமான வானிலையில் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று அவசரகால அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான ஆர்ஐஏ நோவோஸ்டி தெரிவித்துள்ளது.
‘முன்னதாக காணாமல் போன ஹெலிகாப்டரின் சிதைவுகள் வானில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. Mi-8 ஹெலிகாப்டர் சனிக்கிழமையன்று கம்சட்கா பகுதியில் பயணத்தை ஆரம்பித்திருந்தது.
எனினும், திட்டமிட்டபடி அதன் இலக்கை அடையவில்லை என்று ரஷ்யாவின் பெடரல் ஏர் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சி முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
விமானத்தில் 19 பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. Mi-8 என்பது 1960களில் வடிவமைக்கப்பட்ட இரண்டு இயந்திர ஹெலிகாப்டர் ஆகும்.
இது ரஷ்யாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.