தமிழ் பொது வேட்பாளருக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு; இராதாகிருஷ்ணன் சாடல்
தமக்கென தனி இராஜ்ஜியமொன்று அமைக்க வேண்டும் என்ற மனோநிலையே அன்று முதல் இன்றுவரை வடக்கு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இணைந்த வடகிழக்கை ஜே.வி.பியினர்தான் பிரித்தனர், இதனால் ஜே.வி.பியினரை அம்மக்கள் விரும்பவில்லை. ஆனால் தற்போதைய இளைஞர்கள், ஜே.வி.பியினரை ஆதரித்தால் நல்லது என சிந்திக்கும் நிலைமையும் காணப்படுகின்றது.
சஜித் பிரேமதாச புதிய தலைவர், அவரின் தந்தை ரணசிங்க பிரேமதாச இந்திய இராணுவத்தை விரட்டுவதற்கு அவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினார் , எனவே, சஜித்துக்கான ஆதரவு தளம் உள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கும் யாழ்ப்பாணத்தில் ஆதரவு உள்ளது, முழுமையாக இல்லை எனக்கூறமுடியாது. தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார், இது தேவையற்ற விடயமாகும், வாக்குகளை பிரிக்கும் செயலாகும். தமிழரசுக் கட்சி இந்த முயற்சிக்கு உடன்படவில்லை.
வடக்கில் கையகப்படுத்தப்பட்ட காணிகள் மீள வழங்கப்படவில்லை, தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிருப்தி உள்ளது, அதேபோல அம்மக்கள் விரும்பாத சில செயற்பாடுகளை அரசு முன்னெடுக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையால்தான் தமக்கென தனி இராஜ்ஜியமொன்றிருந்தால் என்ற சிந்தனை அவர்களுக்கு ஏற்படுகின்றது. எனவே, மத ஆக்கிரமிப்பு உட்பட தேவையற்ற விடயங்களை ஏற்படுத்தாது, அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்.” – என்றார்.