பங்களாதேஷ் போராட்டம் – 300 பேர் உயிரிழப்பு; பிரதமர் இதுவரை பதவி விலகவில்லை
பங்களாதேஷில் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சுமார் 300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று மாத்திரம் 94 பேர் உயிரிழந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் இருந்து வரும் தகவல்களின் படி, தலைநகர் டாக்காவில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதுடன் முக்கிய வீதிகள் மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அலுவலகத்திற்குச் செல்லும் பாதைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் டாக்கா மற்றும் பிற பிரதேச மற்றும் மாவட்ட தலைமையகங்கள் உட்பட காலவரையற்ற காலத்திற்கு புதிய ஊரடங்கு சட்டம் நேற்று மாலை முதல் அமலில் இருப்பதாக இராணுவம் அறிவித்தது.
அரசாங்க வேலைகளுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடுகள் இருப்பதால் அதனை நிறுத்துமாறு கோரி மாணவர்கள் கடந்த மாதம் தொடங்கிய போராட்டங்களைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரை பதிவி விலகுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த ஆர்ப்பாட்டங்கள் 200 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற வன்முறையாக மாறியது.
மீண்டும் வன்முறை வெடித்ததால், “நாசவேலை” மற்றும் அழிவில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் இனி மாணவர்கள் அல்ல, குற்றவாளிகள் என்றும், மக்கள் அவர்களை இரும்புக் கரங்களால் சமாளிக்க வேண்டும் என்றும் ஹசீனா கருத்து வெளியிட்டார்.
இந்த போராட்டத்திற்கு உள்நாட்டு கட்சிகளின் ஆதரவு இருப்பதாகவும் விமர்சிக்கப்படுவதுடன், இப்போது தடைசெய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியால் போராட்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.