சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை: கமலா ஹாரிஸ்

சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை: கமலா ஹாரிஸ்

நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவோருக்கு எதிராகக் கடுமையாக நடந்துகொள்ளப் போவதாகவும் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை ஆதரிக்கப்போவதாகவும் அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சூளுரைத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஆன பின்னர் முதல்முறை தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற ஹாரிஸ், அமெரிக்காவின் தென்பகுதி எல்லை வாயிலாக சட்டவிரோதமாகக் குடியேறும் விவகாரத்தின் மீது கவனம் செலுத்த இருப்பதாகக் கூறினார்.

எல்லை தொடர்பாக விரிவான சட்டமியற்றும் நடவடிக்கையை மீண்டும் தொடங்க இருப்பதாக சிஎன்என் தொலைக்காட்சியிடம் அவர் தெரிவித்தார்.

எல்லை தாண்டி வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடிநுழைவுக் கொள்கை கடுமையாக்கப்படும் என்றும் ஹாரிஸ் தமது நேர்காணலில் குறிப்பிட்டார்.

“சட்டவிரோதமாக எல்லை கடந்து நாட்டுக்குள் நுழைவோரைக் கையாள நம்மிடம் போதுமான சட்டங்கள் இருப்பதால் விளைவுகள் கடுமையாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், இஸ்ரேலுக்கு தீவிர ஆதரவு காட்டி வரும் ஜனாதிபதி ஜோ பைடனின் ஆயுத விநியோகம் தொடர்பாக சற்று மாறுபட்ட கருத்துடன் பேசினார்.

காஸா போரில் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதன் காரணமாக இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவது பற்றி மறுபரிசீலனை செய்யுமாறு தமது சொந்தக் கட்சியினர் கூறி வருவதை ஹாரிஸ் ஏற்க மறுத்தார்.

ஆயுத விநியோகம் நிறுத்தப்படாது என்று அவர் உறுதிபடக் கூறினார்.

“இஸ்ரேலுக்கு நாம் வலுவான ஆதரவைத் தெரிவிக்கிறபோதிலும் காஸா பூசலுக்கு முடிவுகாண போர்நிறுத்தம் செய்வது குறித்த உடன்பாட்டை நாம் ஏற்படுத்த வேண்டி உள்ளது.

“போரை நிறுத்தவும் பிணைக்கைதிகளை விடுவிக்கவும் உடன்பாடு ஒன்றை நாம் ஏற்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

CATEGORIES
Share This