லாட்வியாவில் 5 இலங்கையர்கள் கைது; குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 -8 ஆண்டுகள் வரை சிறைதண்டனை
சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் லாட்வியாவில் ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் அனைவரும் கடந்த எட்டாம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக அரச எல்லையைக் கடந்த நபர்களை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் குறித்த ஐந்து இலங்கையர்களையும் லாட்வியா குடியரசின் அரச எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
இலங்கையர் ஒருவர் ஓட்டிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது, காரில் இருந்து இருவரிடம் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி ஆவணங்கள் இருந்தன.
எனினும், அந்தக் காரில் இருந்த ஆறு பேரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. அவர்களில் ஐந்து பேர் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த அனைவரும் சந்தேகத்தின் பேரில் எல்லைக் காவலர்களால் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக லாட்வியாவின் அரச எல்லைக் காவல்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
லாட்வியா குடியரசின் குற்றவியல் சட்டத்தின் 285(1)(3) பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்நாட்டு குடியரசின் சட்டத்தின்படி, சட்டவிரோதமாக எல்லை தாண்டியவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், கைது செய்யப்படும் இலங்கையர்களுக்கு இரண்டு முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
எவ்வாறாயினும், மார்ச் 12, 2024 இன் 184 ஆம் இலக்க அமைச்சரவை ஆணைக்கு இணங்க சந்தேகத்திற்குரிய இலங்கையர்கள் சட்டவிரோதமாக மாநில எல்லையை கடக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.