தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு: எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ?
இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் இந்த வாரம் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட உள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன் முதலாக கொழும்பில் இன்று திங்கட்கிழமை வெளியிடவுள்ளார்.
தலவத்துகொட மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெறும் நிகழ்வின் போது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நாளை மறுதினம் புதன்கிழமை (28) வெளியிடவுள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பில் வெளியிடப்படும்,எனவும் நேரம் மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் சமூக சந்தைப் பொருளாதார அமைப்பிற்குள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, விவசாயம், டிஜிட்டல் மயமாக்கல், சுகாதாரம், தொழில்முனைவு மற்றும் கூட்டுறவு அமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்துவதாகவும் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.