இலங்கை ஜனாதிபதி தேர்தல்: அவுஸ்திரேலியா, கனடா மற்றும் அயர்லாந்து பயண ஆலோசனை
இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பயண ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், அதன் பின்னரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என்பதால், வெளிநாட்டு பிரஜைகள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறும் எனவும் தேர்தலுக்கு முன்பும், தேர்தலின் போதும், அதன் பின்பும் பொது ஆர்ப்பாட்டங்கள் நடந்து வன்முறையாக மாறலாம் என்றும் அவுஸ்திரேலியா அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், “ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்குமாறு” அவுஸ்திரேலியா தனது நாட்டு பிரஜைகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, தேர்தல் காலத்தில் அரசியல் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என்று அயர்லாந்து தெரிவித்துள்ளது.
ஆகையினால் இலங்கைக்கு பயணிக்கும் ஐரிஷ் பிரஜைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எனவும், ஆர்ப்பாட்டங்களை தவிர்க்கவும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற உள்ளதாகவும், இந்தக் காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என்றும் கனடா தனது பிரஜைகளுக்கு எச்சரித்துள்ளது.