ஐநா மனித உரிமைகள் ஆணையரின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் இலங்கை: உறுப்பு நாடுகளுக்கு விளக்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைநிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஐநா மனித உரிமைகள் பேரவையின் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.
மனித உரிமைகள் பாதுகாப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை இன்னும் செய்யாமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், 2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் மூலம் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், கைதிகளுக்கு எதிரான சித்திரவதைகள் அதனால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, ஐ.நா உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான அதன் நிலைப்பாட்டை ஜெனிவாவை தளமாகக் கொண்ட உலக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு தூதர்களுக்கு அரசாங்கம் விளக்கியுள்ளது.
இதன்படி, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஆணையர் வோல்கர் டர்க் எழுப்பிய பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு விளக்கினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் 17 பக்க அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள விடயங்களை எதிர்கொள்வதற்கான விரிவான அறிக்கையையும் அமைச்சு தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
அங்கத்துவ நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்பட்ட ஒன்பது பக்க சுருக்கக் குறிப்பில், “சமூக மற்றும் அரசியல் முன்னணியில் ஜனநாயக ரீதியாக சவால்களை வெற்றிகொள்வதில் மட்டுமன்றி, அண்மைய வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் இலங்கை வெற்றியடைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.