நான் பொது வேட்பாளரை ஆதரிக்கவும் இல்லை சுமந்திரன், சாணக்கியனை எதிர்க்கவும் இல்லை
நான் பொது வேட்பாளரை ஆதரிக்கவும் இல்லை சுமந்திரன், சாணக்கியனை எதிர்க்கவும் இல்லை: ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் விளக்கம்
“தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பூரண ஆதரவு என்று ஊடகங்களில் வெளிவந்த செய்தி மற்றும் நாடாளுமன்ற உறப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியனன் ஆகியோரைத் தவறாக நான் பேசியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி அனைத்தும் நான் தெரிவிக்காதமைக்கு உண்மைக்குப் புறம்பாகத் திரிவுபடுத்திப் பொய்யாக வெளியிடப்பட்டுள்ளன.”
- இவ்வாறு ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, தாண்டவன்வெளி முதியோர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் ஓய்வுபெற்று தங்கியிருக்கும் நிலையில் என்னைப் பலர் வந்து சந்தித்துச் செல்கின்றனர். இந்தநிலையில் ஊடகவியலாளர்களும் வந்து என்னைச் சந்தித்துச் செல்கின்றனர்.
நான் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோருக்கு எதிராகவும் மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு பூரண ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துள்ளதாகப் பொய்யான செய்திகள் வெளிவந்துள்ளன.
எனவே, நான் அவ்வாறு எதுவும் தெரிவிக்கவில்லை. நான் சொல்ல விரும்புவது இதுதான், எமது நாட்டில் சுதந்திரம் வேண்டும். எல்லோரும் சுதந்திரமாகவும் சமாதானமாகவும் வாழவேண்டும். அதற்காக யார் யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமே அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும். முடியாதவர்கள் பேசாமல் விடுங்கள் என்றேன். இப்படி நான் சொன்னதைத் திரிவுபடுத்திப் பொய்யான செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
எனக்கு விருப்பம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும், சமாதானமாக வாழ வேண்டும். அவர்கள் எப்படி வாழவேண்டுமே அப்படி வாழவேண்டும் என்பது எனது விருப்பம். அதனைத் தவறாகப் புரிந்து திரிவுபடுத்தி எனக்கு எதிராகப் பிரசாரம் செய்துள்ளனர்.
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும் எனது விருப்பம். அதனை அன்றும் வலியுறுத்தினேன் இன்றும் அதனை வலியுறுத்துகின்றேன். எனவே, பொய் வதந்திகளை, பிரசாரங்களை நம்ப வேண்டாம்.
நான் அப்படி எதுவும் சொல்லவும் இல்லை, அப்படி எதுவும் விரும்பவும் இல்லை. தமிழ் மக்களின் விருப்பம் எதுவோ அதற்காகப் பாடுபட வேண்டும் என்பது எனது விருப்பம். அதனை நிறைவேற்றத்தான் குருவாக, ஆயராக இறைவன் என்னைத் தோர்ந்து எடுத்துள்ளார்.
நான் ஓய்வுபெற்றாலும் எனது நோக்கம் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதனை விடுத்து ஒருவருக்கு ஒருவர் பிரசாரம் செய்து பொய்யாக சொல்லி தவறான வழியில் செல்வதை நான் விரும்பவில்லை. அதனை எச்சரிக்கின்றேன். எதிர்க்கின்றேன்.” – என்றார்.