ஐ.தே.கவின் புதிய தலைவராக ருவான் விஜேவர்தன?
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மற்றும் அதன் செயற்பாடுகளிலிருந்து முன்னாள் ஜனாதிபதி விலகுவதாகவும் அதன் தலைமைப் பொறுப்பை ருவான் விஜேவர்தனவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சிக்குள் இந்த மாற்றங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் எனவும் ஐக்கியத் தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து அரசியல் இணக்கத்தை உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி அமைக்க தயாரில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியாக தெரிவித்துள்ளமையால் எதிர்வரும் நாட்களில் அரசியல் இணக்கத்துக்கு தேவையான சூழலை தயார்படுத்தும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீங்கி ருவான் விஜேவர்தனவுக்கு கட்சியின் செயற்பாட்டை நடத்தும் பொறுப்பை வழங்க தயாராகி வருவதாகவும் எனினும் அதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் செய்தி குறிப்பிடுகின்றது.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை இணைக்கும் கலந்துரையாடல் மூன்று கட்டங்களாக இடம்பெற்றுள்ள நிலையில் இன்றும் அந்த கலந்துரையாடல் நடைபெறும் என உள்ளகத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.