திடீரென பின்வாங்கினார் தம்மிக்க பெரேரா: மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகின்றார் நாமல்

திடீரென பின்வாங்கினார் தம்மிக்க பெரேரா: மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகின்றார் நாமல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச இதனை உறுதிசெய்துள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்காளர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

38 வயதான நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை பலரும் உறுதி செய்துள்ளனர். அவ்வாறு போட்டியிட்டால் இந்த தேர்தலில் போட்டியிடும் இளம் வேட்பாளர் என்ற அங்கிகாரத்தைப் பெறுவார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்றைய தினம் தனது முடிவில் இருந்து பின்வாங்கிய தம்மிக்க பெரேரா, தனிப்பட்ட காரணங்களுக்கான தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சிக்கு அறிவித்துள்ளார்.

தம்மிக்க பெரேராவின் இந்த முடிவால் மொட்டுக் கட்சி நிலைகுழைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், பிரதமர் அதனை நிராகரித்துள்ளார்.

இதனால் ஜனாதிபதி வேட்பாளரை கண்டுபிடிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் நெருக்கடியை எதிர்கொண்டதாக அறியமுடிகின்றது.

இவ்வாறான பின்னணியிலேயே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This