தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம்; இந்த வாரத்துக்குள் அறிவிக்கலாம்
தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை இரவு, பகலாக தேடி வருகிறோம். இந்த வரத்துக்குள் அந்த வேட்பாளரை தெரிவு செய்து விடுவோமென தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். நகரில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர், மேற்கண்டாவாறு தெரிவித்தார். இதுபற்றி மேலும். தெரிவித்ததாவது:
தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தபடுவது ரணிலுக்கோ, சஜித்துக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஆதரவை வழங்வதற்காக அல்ல.மாறாக ரணிலுக்காக என்று கூறுவதும் முற்றிலும் தவறானது.
தமிழ் மக்களின் எதிர்காலத்துக்காகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
பொது வேட்பாளர் தேர்வில் பலரது பெயர்கள் இருக்கின்றன. அதில் ஒருவரை தேர்வு செய்வதென்றால் மாறி, மாறி குற்றசாட்டுச் சுமத்தும் நிலைமையே ஏற்படுகிறது.ஏதாவது ஒரு விதத்தில் தாமே,பொது வேட்பாளராக வர வேண்டுமென சிந்திப்பவர்களும் இருக்கின்றனர். இவர்கள் மிடுக்கோடு பேசுபவர்களாக உள்ள நிலைமையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.எனினும்,இந்த வாரத்துக்குள் பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுத்து விடுவோம்.
இந்த பொது வேட்பாளர் விவகாரத்தை கைவிடச் சொல்லி தூதரகங்களின் அழுத்தம் ஏதும் இல்லை. இந்திய தரப்பின் அழுத்தங்கள் இருப்பதாக எனக்கு தெரியாது.தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டாமென வேறு அழுத்தங்களும் வரவில்லை. ஆனால் சிங்கள வேட்பாளர்களிடைய ஒருவிதமான அச்சமும், பயமும், அருவருப்பும் வந்திருப்பதாக தெரிகிறது என்றார்.