சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் 108ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கப்பட்ட துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண ஆகியோரும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தனர்.
துமிந்த திஸாநாயக்க மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமர்ந்து தேநீர் அருந்தியதோடு, நீண்ட நேரம் சுமூகமாகக் கலந்துரையாடிக் கொண்டிருந்ததையும் இதன் போது அவதானிக்க முடிந்தது.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று எதிர்கொண்டுள்ள சவால்களை விட பாரிய சவால்களை, அன்று சிறிமாவோ பண்டார நாயக்கவின் குடியுரிமை நீக்கப்பட்ட போது எதிர்கொண்டது. ஒவ்வொருவரும் பிரிந்து சென்று தனிக்கட்சிகளை ஆரம்பித்த போது, நாம் அவருடன் தனிப்பயணம் சென்று வெற்றி பெற்றோம்.
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? பண்டாரநாயக்க குமாரதுங்க தனது அமைச்சரவையிலிருந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட இரு அமைச்சர்களை பதவி நீக்கினார்.
அதன் பின்னர் எனது ஆட்சியிலேயே அவ்வாறான சம்பவம் இடம்பெற்றது. எனது ஆட்சியின் பின்னர் அமைச்சரொருவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். இவற்றை மறக்க முடியாது. நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்றார்.