போராட்டத்தால் உருக்குலைந்த பங்களாதேஷ்; முக்கிய சில அப்டேட்கள்

போராட்டத்தால் உருக்குலைந்த பங்களாதேஷ்; முக்கிய சில அப்டேட்கள்

பங்காளதேஷை 15 ஆண்டுகள் வழிநடத்திய பிறகு, ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் ஷேக் ஹசீனா (Sheikh Hasina), திங்களன்று மக்கள் போராட்டம் உச்சத்தை எட்டியதால், இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த மூன்று வாரங்களாக வன்முறைகளாலும், மரணத்தாலும் தத்தளித்த டாக்காவின் தெருக்களில் அவர் வெளியேறியதைத் தொடர்ந்து கொண்டாட்டங்கள் வெடித்தன.

முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் (Awami League)தவிர, அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து புதிய இடைக்கால அரசாங்கம் விரைவில் அமைக்கப்படும் என்று அந்நாட்டு இராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் (Waker-Uz-Zaman) கூறினார்.

அதேநேநேரம், 300 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அவர் உறுதியளித்தார்.

இது “வன்முறையை நிறுத்துவதற்கான நேரம்” என்றும் “அனைத்து அநீதிகளும் தீர்க்கப்படும்” என்றும் கூறினார்.

இராணுவ விமானத்தில் இந்தியா வந்த ஹசீனா, இங்கிலாந்தில் தஞ்சம் கோர இருப்பதாக கூறப்படுகிறது.

ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் ஜாய், பங்களாதேஷுக்குத் திரும்பும் திட்டத்தை ஹசீனா விரும்பவில்லை என்று உறுதிப்படுத்தினார்.

பங்களாதேஷ் வன்முறை பற்றிய முக்கிய 10 அப்டேட்கள்:

  1. ஷேக் ஹசீனா பங்களாதேஷில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, டெல்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் திங்கள்கிழமை இறங்கினார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகள் ஹசீனா வந்தவுடன் அவரை சந்தித்தனர், அங்கு அண்டை நாட்டில் நிலவும் சூழ்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
  2. ஹசீனா லண்டனுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், அங்கு அவர் புகலிடம் பெறுவார் என்று நம்புவதாகவும் ஆதாரங்கள் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்தன. ஆனால், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி, பங்களாதேஷில் நடந்த கொடிய வன்முறை குறித்து ஐ.நா தலைமையிலான முழுமையான மற்றும் சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து அவரது திட்டங்கள் நிச்சயமற்றவையாக அமைந்தன.
  3. ஹசீனா கடந்த 14 மணிநேரமாக காசியாபாத்தில் அமைந்துள்ள ஹிண்டன் ஏர்பேஸில் தங்கியிருந்ததாக உயர்மட்ட வட்டாரங்கள் இந்தியா டுடேவிடம் தெரிவித்தன, அவர் தனது பயணத்திற்கான இங்கிலாந்தின் அனுமதிக்காக காத்திருக்கிறார். அவர் தங்கியிருக்கும் போது மரியாதை நிமித்தமான சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.
  4. ஷேக் ஹசீனா வெளியேறியதைத் தொடர்ந்து வன்முறைகள் தொடர்வதால், பங்களாதேஷில் நிலைமை நிலையற்றதாகவே உள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செவ்வாய்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று இடை-சேவை மக்கள் தொடர்பு (ISPR) அறிவித்துள்ளது.
  5. ஹசீனாவின் ஆட்சியின் முடிவு, டாக்காவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தின் மேற்கூரையில் இருந்து கொடிகளை அசைத்து பலராலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தப்பட்டது. போராட்டக்காரர்கள் படுக்கைகளில் படுத்து, தளபாடங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்வது, சமையலறையை ஆராய்வது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.
  6. ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து, பெருமளவில் ஆரவாரம் செய்து புகை குண்டுகளை வீசினர். அவர்கள் ஹசீனாவின் தந்தை மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சுவரோவியங்கள் மற்றும் சிலைகளுக்கு சேதம் விளைவித்து சொத்துக்களை அழித்து, சிதைத்தனர்.
  7. ஒரு ஜனநாயக மற்றும் உள்ளடக்கிய ஒரு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க அமெரிக்கா வலியுறுத்தியது மற்றும் பல வாரங்கள் கொடிய போராட்டங்களுக்குப் பிறகு “மேலும் வன்முறையைத் தவிர்க்க” அனைத்துத் தரப்புகளுக்கும் அழைப்பு விடுத்தது.
  8. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் “அமைதியான, ஒழுங்கான மற்றும் ஜனநாயக மாற்றம்” மற்றும் “அனைத்து வன்முறைச் செயல்கள் மீதும் முழுமையான, சுதந்திரமான, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு” அழைப்பு விடுத்தார்.
  9. ஷேக் ஹசீனா 2009 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷில் ஆட்சியில் இருந்தார். அவரது ஆட்சி பொருளாதார வளர்ச்சியால் குறிக்கப்பட்டது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 6 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியடைந்தது. இருப்பினும், அவரது அரசாங்கம் மனித உரிமை மீறல்கள், ஊழல் மற்றும் அரசியல் எதிர்ப்பை அடக்குதல் போன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டது.
  10. அவரை மீண்டும் ஆட்சிக்கு வரச் செய்த தேர்தல்களின் நேர்மை குறித்தும் கேள்விகள் எழுந்தன. அதுதான் வேலை ஒதுக்கீட்டுப் போராட்டங்கள், எதிர்க்கட்சிகளால் தூண்டப்பட்டு, அவரது ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டமாக மாற்றியது.
CATEGORIES
Share This