தேர்தல் – சுயமரியாதையை இழக்கும் உறுப்பினர்கள்!: ”இதயம்“ சின்னத்தில் ரணில்?
இலங்கைத் தீவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பல திருப்பு முனைகளுடன் ஆயத்தமாகி வருகிறது.
ஒவ்வொரு கட்சிகளும் தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் தீர்மானமிக்க இந்தத் தேர்தலை நடத்தி முடிப்பதில் தனது கடமையைச் சரிவர நிறைவேற்றி வருகிறது.
தேர்தலை அறிவித்தவுடனேயே கட்டுப் பணத்தை செலுத்தித் தனது பெயரை பட்டியலில் முதலாவதாக இணைத்துக் கொண்டார் ரணில் விக்கிரமசிங்க.
தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கட்டுப் பணத்தை செலுத்தி விட்டார்.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘இதயம்’ சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதயத்திற்கு நெருக்கமாக, பிரச்சார நடவடிக்கைகளுக்கு இலகுவாக அமையும் விதத்தில் அவர் “இதயம்“ சின்னத்தை பிரநிதிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
அண்மைய தினங்களாகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல கேள்விகள் எழுந்த நிலையில் தமது ஆதரவு ரணிலுக்கு இல்லை என்றும் தமது வேட்பாளரை வெகு விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தற்போது பல பிளவுகளை கொண்டிருந்தாலும் கூட கட்சிக்குள் பல அரசியல் விளையாட்டுக்கள் இடம்பெற்று வருவதை தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
2019ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு இலங்கை வாழ் சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட விருப்பும் நம்பிக்கையும் தற்போது காணப்படுவதில்லை என்பது கண்கூடு.
பொதுவாக ராஜபக்ச குடும்ப அரசியலில் பொதுமக்களுக்கு எதுவித விருப்பும் காணப்படவில்லை.
அனுரவிற்கான வாய்ப்பு
75 வருடகால அரசியல் ஆட்சியில் 69 இலட்ச மக்கள் விரும்பி பதவியேற்ற ஒரு ஜனாதிபதியை அதே மக்கள் இணைந்து பதவி விலக வழி வகுத்தனர்.
இவ்வாறான ஒரு சூழலில் பொதுமக்கள் மேலும் அவ்வாறான ஒரு தவறை இழைக்க விரும்பவில்லை என்பதே மக்களின் எண்ணப்பாடாகவும் உள்ளது.
இதன்காரணமாக, இம்முறை ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்த்து ரணில்,சஜித்,மகிந்த அரசியலைத் தாண்டி அனுரவிற்கு வாக்களிக்கும் வாய்ப்புகளும் காணப்பட்டு வருகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பொதுமக்கள் மத்தியில் காணப்படக்கூடிய கடும் எதிர்ப்பு காரணமாக அக்கட்சி ரணிலுடன் இணைந்தால், அது தோல்வியில் நிறைவடையும் என்பதை அரசியல் இராஜதந்திரியான ரணிலும் அறிவார்.
இதன் காரணமாகவே பொதுஜன பெரமுன துண்டுகளாக பிளவுபட்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றதா என்பது நேற்று (30) நாமல் ராஜபக்ச தெரிவித்த கருத்தின்படி ஊர்ஜிதமாகின்றது.
இந்தியாவின் கணிப்பு
இவ்வாறான பின்னணியில், இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்தியாவில் இருந்து சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்தியாவில் பொதுவாக ஜோதிடம் அதிகளவில் பெயர் பெற்றதாகும். அதன்படி, இந்தியாவில் இருக்கக்கூடிய பிரபல ஜோதிடர்கள் சிலர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் ஏதோ ஒரு விதத்தில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என கணித்துள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதாகமும் இந்த பிரபல ஜோதிடர்கள் மூலமே கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அல்லது பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவுக்கு வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத் தகவல்கள் கூறுகின்றன.
“சர்வ ஜன பலய“ கூட்டணி
பிரபல தொழில் அதிபர் திலித் ஜயவீர மற்றும் விமல் விவரவன்ச ஆகியோரை மையப்படுத்திய “சர்வ ஜன பலய“ கூட்டணியும் எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறுவுள்ள குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது.
தற்போது இருக்கக்கூடிய வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமது கட்சி சார்பில் ஒருவரை முன்வைப்பதா என்பது தொடர்பில் அன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டவுள்ளது.
அனைத்து விடயங்களையும் தீர்மானித்து எதிர்வரும் 4ஆம் திகதி சுகதததாச உள்ளக விளையாட்டரங்கில் ஒன்று கூடி அதனை அதிகாரபூர்வதாக அறிவிக்க தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியை பிரநிதித்துவப்படுத்தும் ஒரு சில உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் ரணிலுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசேடமாக ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு வழங்கும் சந்தர்ப்பம் பார்த்து இவ்வாறு ரணில் பக்கம் செல்லவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.