சாகோஸ் தீவுகள் – இங்கிலாந்தின் கடைசி ஆபிரிக்க காலனி: மொரிஷியஸுக்கு மீள ஒப்படைப்பு !

சாகோஸ் தீவுகள் – இங்கிலாந்தின் கடைசி ஆபிரிக்க காலனி: மொரிஷியஸுக்கு மீள ஒப்படைப்பு !

  • ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பிரித்தானியாவின் கடைசி ஆபிரிக்க காலனியான ‘சாகோஸ் தீவுகள்’ தொடர்பாக பல வருடங்களாக நிலவி வந்த கசப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்க இங்கிலாந்து ஒப்புக்கொண்டுள்ளது)

பல தசாப்தங்களாக நிலவி வந்த தகராறுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரித்தானியாவின் கடைசி ஆபிரிக்க காலனியான சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்க உடன்பாடு எட்டப்பட்டதாக ஐக்கிய இராச்சியம் 3/10/24 வியாழக்கிழமை அறிவித்தது.

சர்வதேச நீதிமன்றத்தால் (ICJ) 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொரிஷியஸின் இறையாண்மைக்கான அழைப்புகள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 2022 இல் தொடங்கிய 13 சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

மொரீஷியஸிலிருந்து சாகோஸ் தீவுக்கூட்டம் பிரிந்ததால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகள் குறித்து சர்வதேச நீதிமன்ற கோரிக்கையின் பேரில் மொரீஷியஸின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் ஐநா பொதுச் சபை கூட்டத்தில் அண்மையில் உரையாற்றினார்.

சட்டத்திற்கு புறம்பான ஆபிரிக்க காலனி:

1968 இல் மொரிஷியஸுக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன், பிரித்தானியா சட்டத்திற்குப் புறம்பாக பிரித்தானியா அரசால் ‘பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசம்’ (BIOT) என பெயரிடப்பட்ட சாகோஸ் தீவுக்கூட்டத்தில் ஒரு புதிய காலனியை உருவாக்கியது.

ICJ தீர்ப்புகளை வெறும் ஆலோசனைக் கருத்து என்று வாதிட்டு, தீவுகளை மொரிஷியஸுக்குத் திரும்பக் கோரும் ஐ.நா தீர்ப்புகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை பிரிட்டன் ஆரம்பத்தில் நிராகரித்தது. ICJ என அழைக்கப்படும் உலக நீதிமன்றம், நாடுகளுக்கு இடையேயான தகராறுகளை தீர்ப்பளிக்கும் ஐ.நா.வின் கொள்கை நீதித்துறை அமைப்பாகும்.

தீவுவாசிகளின் கட்டாய இடம்பெயர்வு:

மொரிஷியஸிலிருந்து இத் தீவுகளைப் பிரித்து 1,500 முதல் 3000 தீவுவாசிகளை இங்கிலாந்து வெளியேற்றியது. இதன் பின்னர் சாகோஸ் தீவுகளில் மிகப்பெரிய டியாகோ கார்சியாவை அமெரிக்காவிற்கு இராணுவப் பயன்பாட்டிற்காக குத்தகைக்கு விடப்பட்டது. இவ் ஆக்கிரமிப்பை அமெரிக்க – இங்கிலாந்து இரு நட்பு நாடுகளும் கூட்டாகச் செயற்படுத்தின.

ஆக்கிரமிப்பின் பின்னர் சாகோஸில் நிரந்தர மக்கள் தொகை இல்லை என்று இங்கிலாந்து பொய்யாக அறிவித்தது. அதனால் அது தனது காலனித்துவ ஆட்சியை ஐநாவிடம் தெரிவிக்கவில்லை. உண்மையில், சாகோசியன் சமூகம் பல நூற்றாண்டுகளாக அங்கு சாகோஸில் வாழ்ந்து வந்தது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் 1967 மற்றும் 1973 க்கு இடையில் சாகோசியன் மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர வைத்ததன் பின்னரே டியாகோ கார்சியாவில் பாரிய இராணுவ தளத்தை உருவாக்கியது.

டியாகோ கார்சியா இராணுவ தளம்:

புதிய ஒப்பந்தத்தின் கீழும் டியாகோ கார்சியாவில் உள்ள இங்கிலாந்து-அமெரிக்க இராணுவ தளத்தின் கட்டுப்பாட்டை இங்கிலாந்து தொடர்ந்து வைத்திருக்கும்.

ஐக்கிய இராச்சிய வெளியுறவுச் செயலர் டேவிட் லாம்மி, இராணுவ தளத்தின் எதிர்காலத்தை இங்கிலாந்து அரசாங்கம் பாதுகாத்துள்ளதுடன், நெருங்கிய காமன்வெல்த் பங்காளியான மொரிஷியஸுடனான நமது நீண்டகால உறவுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக சாகோஸ் தீவுகளில் வசிக்கும் பழங்குடியினரான சாகோசியர்கள் தொடர்ந்து வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு வந்தனர். மேலும் ஒப்பந்தத்தின் வரைவில் அவர்களின் வாழ்விட உரிமை முழுமையாக சேர்க்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

புதிய ஒப்பந்தம் அமுலாகுமா ?

பிரித்தானியா சாகோஸ் தீவுகளை மொரிஷியஸுக்கு திருப்பித் தர, 13 சுற்று பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து கடைசி ஆப்பிரிக்க காலனியை திரும்ப ஒப்படைக்க புதிய ஒப்பந்தம் உருவாகி உள்ளது.

1960- 1970களில் தங்கள் சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சாகோசியர்களுக்கு திரும்புவதற்கான உரிமையை இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது. பிரித்தானியாவின் அன்றைய ஆக்கிரமிப்பு மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் போருக்குப் பிந்தைய காலனித்துவத்தின் மிகவும் அவமானகரமான அத்தியாயங்களில் ஒன்றாக விவரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தீவான டியாகோ கார்சியா தொடர்ந்து இங்கிலாந்து-அமெரிக்க கூட்டு இராணுவ தளத்தை கொண்டிருக்கும். மேலும் இது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் தொடரந்து வைத்திருக்கும்.

40 ஆண்டு கால நீண்ட போராட்டம்:

1968 இல் இங்கிலாந்தால் சாகோஸ் தீவுகள், மொரிஷியஸின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டு 3000 பேர் வரை வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கப்பட்டனர்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த ஒரு நீண்ட போராட்டத்தில், அங்கு வாழ்ந்த மக்களில் பலர் இறந்துவிட்டனர். ஆயினும் 2000 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து நீதிமன்றங்களில் இத்தீவுகளின் இறையாண்மையின் மீது தொடர்ச்சியான சட்ட சவால்களை எதிர் கொண்டது.

தற்போதய மீள ஒப்படைப்பின் பின்னர், எத்தனை சாகோசியர்கள் தீவுகளுக்குத் திரும்ப விரும்புகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, அங்குள்ள குடியிருப்புகள் பல வசிக்கத் தகுதியற்றவை. அங்கு வரும்

சாகோசியர்களின் வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.

சக்தியற்றவர்களின் குரல் :

நமது தாயகத்தின் இறையாண்மை தொடர்பான இந்த நோக்கத்தை உருவாக்கிய பேச்சுவார்த்தைகளில் இருந்து சாகோசியன் சமூகத்தை விலக்கியதை சாகோசியன் குரல்கள் வருத்தம் தெரிவிக்கின்றன. சாகோசியர்கள் இந்த முடிவை ஊடகங்களிலிருந்து கற்றுக்கொண்டனர். நமது சொந்த எதிர்காலத்தையும் நமது தாயகத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதில் சக்தியற்றவர்களாகவும் குரலற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என ‘சாகோசியன் குரல்கள்’ எனும் பிரிட்டன் மற்றும் பல நாடுகளில் உள்ள சமூக அமைப்பானது நேற்றய வியாழன் அறிவிப்பு பற்றி கூறியுள்ளது.

அத்துடன் இந்த ஒப்பந்தத்தில் சாகோசியர்கள் கலந்தாலோசிக்கப் படவில்லை அல்லது ஈடுபடவில்லை என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் அமைந்தன எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை தீவுகளின் பழங்குடியினரான சாகோசியர்களின் கருத்துக்கள் தொடர்ந்து வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன. மேலும் ஒப்பந்தத்தின் வரைவில் தாயக உரிமை முழுமையாக சேர்க்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

அதேவேளையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், இந்த ஒப்பந்தத்தை நாடுகள் இடையே அமைதியான மற்றும் பரஸ்பரம் அடைய முடியும் என்பதற்கான தெளிவான பார்வை என்று கூறியுள்ளார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் – HRW

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRW), கடந்த ஆண்டு அறிக்கையில், சாகோஸ் தீவுவாசிகளின் பலவந்தமான இடப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்ட தலைமுறைகளுக்கு முழு மற்றும் நிபந்தனையற்ற இழப்பீடுகளை இங்கிலாந்து வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆயினும் இந்த ஒப்பந்தம் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திகிய பின்னரும், சாகோசியர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்புவார்கள் என்பதற்கு இது உத்தரவாதம் அளிக்கவில்லை. மேலும் ஒரு நூற்றாண்டுக்கு மிகப்பெரிய தீவான டியாகோ கார்சியாவிலிருந்து அவர்களை வெளிப்படையாகத் தடை செய்வதாகத் தோன்றுகிறது.

மேலும் அவர்கள் அனைவரும் தங்கள் எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய இழப்பீடுகளை வழங்குவது பற்றி குறிப்பிடவில்லை. இந்த ஒப்பந்தம் அவர்களின் உரிமைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மேலும் சாகோசியர்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனைகளை பகிர வேண்டும். இல்லையெனில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இப்போது மொரீஷியஸ் நாடும் முன்னைய காலனித்துவ குற்றத்திற்கு பொறுப்பாகும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கோரியுள்ளது.

CATEGORIES
Share This