நாமல் உட்பட இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள்: கையிருப்பில் 30 இலட்சம் வாக்குகள்
பொருளாதார மற்றும் வர்த்தக நோக்கில் பார்த்தால் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவும், இளைஞர் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நாமல் ராஜபக்சவும் இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி, தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பொதுஜன பெரமுனவுக்கு ஏற்கனவே 30 இலட்சம் என்ற நிலையான வாக்குகள் இருப்பதாகவும், கடந்த தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களித்த ஏழு பேரில் நால்வருக்கு வேறு கருத்துக்கள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான்கு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுவதால், பொதுஜன பெரமுனவின் அதிர்ஷ்ட வேட்பாளர் ஜனாதிபதியாகும் சாத்தியம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் நாளை வியாழக்கிழமை தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்க பொதுஜன பெரமுன கூட உள்ளது. பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென கூறுபவர்களின் நிலைப்பாடாக உள்ளது.