தாஜ்மகாலில் உருஸ் விழாவுக்கு தடை கோரி வழக்கு!
தாஜ்மகாலில் 3 நாள் கொண்டாடப்படும் உருஸ் விழாவுக்கும் இந்த நாட்களில் பார்வையாளர்களை இலவசமாக அனுமதிக்கவும் நிரந்தரத் தடை கோரி ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் தாஜ்மகால் உள்ளது. முகலாய பேரரசர் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக இதனை கட்டினார். 1653-ல் கட்டி முடிக்கப்பட்ட தாஜ்மகால், உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனை மத்திய அரசின் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) நிர்வகித்து வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு ரூ.50-ம் வெளி நாட்டவர்களுக்கு கூடுதலாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தாஜ்மகாலில் பேரரசர் ஷாஜகான் மற்றும் மும்தாஜின் சமாதிகள் உள்ளன. இவற்றில் ஷாஜகான் பிறந்த நாளுக்காக பெப்ரவரி 6 முதல் 8-ம் திகதி வரை உருஸ் விழா கொண்டாப்படுகிறது. இஸ்லாமியத் துறவிகளுக்கான இந்த உருஸ் விழாவை ஆக்ரா தாஜ் உருஸ் குழு பல ஆண்டுகளாகக் கொண்டாடுகிறது. இந்த 3 நாட்களும் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இந்த இலவசத்திற்கும், உருஸ் நடத்தவும் தடை கேட்டு அகில பாரதிய இந்து மகாசபா மற்றும் வலதுசாரி கொள்கைவாதிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு ஆக்ராவின் சிவில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் 5-ம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மனுதாரர்களின் வழக்கறிஞர் அனில் குமார் திவாரி கூறும்போது, “ஆக்ராவின் வரலாற்றாளர் ராஜ் கிஷோர் ராஜே, எங்களது மனுதாரர்கள் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது. இதில் வெளியானத் தகவலின்படி, தாஜ்மகால் உள்ளே தொழுகை மற்றும் உருஸ் விழாவுக்கு முகலாய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் மத்திய அரசு என எவரும் அனுமதி அளிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
டெல்லிக்கு அருகிலுள்ள தாஜ்மகாலை பார்வையிட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்று தாஜ்மகால் அருகிலுள்ள மசூதியில் மதியம் சிறப்புத் தொழுகை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதற்காக, தாஜ்மகால் அமைந்திருக்கும் தாஜ் கன்ச் பகுதியின் 300 முஸ்லிம்கள் வருகை தருகின்றனர். இவர்களுக்கு தற்போது அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை இல்லாமல் வருவோருக்கு அனுமதி கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக தாஜ்மகால் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு பொதுநல வழக்குகள் ஆக்ரா நீதிமன்றங்களில் தொடரப்பட்டு நிராகரிக்கப்படுவது நினைவுகூரத்தக்கது.