கனகச்சிதமாக காரியத்தை சாதித்த ரணில்: கூண்டோடு அழியும் பெரமுன
இலங்கை அரசியல் வரலாற்றில் குறுகிய காலத்தில் பலமான கட்சியாகவும் நாடு முழுவதும் பலமான கட்டமைப்மை உருவாக்கிய கட்சியாகவும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின் உருவான பொதுஜன பெரமுன கட்சி திகழ்ந்தது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் எண்ணக்கருவில் உருவான இந்தக் கட்சியில் சுதந்திர இலங்கையில் உருவான இரண்டாவது பலமான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இணைந்தனர்.
அதன் காரணமாகவே 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வரலாறுகாணாத வெற்றியை பொதுஜன பெரமுன பெற்றதுடன், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றிபெற்றது. இந்த வெற்றிகளை குவிக்க அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் இனவாதமும் மதவாதமும் ஆகும்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முறையற்ற தீர்மானங்கள், கொள்கைகள் காரணமாக நாடு பொருளாதார ரீதியாக கடுமையான சரிவை சந்தித்தது.
இதன் தாக்கம் பல தசாப்தகால ராஜபக்சர்களின் நன்மதிப்பையும் நாட்டில் குறைத்ததுடன், நாட்டைவிட்டு தப்பியோடும் நிலையும் கோட்டாபயவுக்கு உருவானது.
இந்தப் பின்புலத்தில் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்ரமசிங்க, கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியதால் பொதுஜன பெரமுனவின் எம்.பிகளில் பெரும்பாலானாவர்கள் ரணிலை ஆதரித்து வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் எண்ணத்தில் உறுதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க ராஜபக்சர்களை ஒதுக்கும் அதேவேளை, அந்த கட்சியின் ஆதரவாளர்களை தம்பக்கம் திருப்பும் தேவையும் இருந்தது.
இந்தக் காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றியுள்ளார். இன்று பொதுஜன பெரமுனவின் 92 எம்.பிகள் ரணிலை ஆதரித்துள்ளனர். ஆனால், ராஜபக்சர்கள் எதிரிகளாக மாறியுள்ளனர். மேலும் சில எம்.பிகள் ரணில் பக்கம் தாவக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
இந்தப் பின்புலத்தில் பொதுஜன பெரமுனவின் மகளிர் அணியும் ரணிலை ஆதரித்துள்ளது. அதேபோன்று மாவட்ட மட்டங்களில் ரணிலை ஆதரிக்கும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 116 பேர் ரணிலை ஆதரிக்கும் ஆரம்பகட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். விரைவில் மேலும் பலர் தமது ஆதரவை மாவட்ட ரீதியாக வழங்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அதேபோன்று உள்ளூராட்சிமன்றங்களின் முன்னாள் உறுப்பினர்களும் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது.