குடும்ப ஆட்சியினாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது!
“நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த குடும்ப அரசியல் காரணமாகவே நாட்டு மக்கள் இந்த பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக” தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “நாட்டில் பொலிஸ் மா அதிபர் விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி பிரதமர் நாடாளுமன்றில் கருத்துரைக்கின்றார்.
அதனை நாடாளுமன்றத்திற்கு வெளியே கூறுவாராயின் அவர் கைது செய்யப்பட வேண்டும்.
சபாநாயகரும் உயர்நீதிமன்றமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.
இலங்கையில் அவ்வாறான பேச்சுவார்த்தை முறைமை ஒன்று இல்லை. இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் உயர்நீதிமன்றம் பங்குபற்றாமல் உள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
பொலிஸாரை பயன்படுத்தி அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முனைகின்றார். அதற்கு முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவருக்கு மிகவும் தேவையாகவுள்ளது“இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.