நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து தலைவர்கள்: ஒரே சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்
நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து தலைவர்கள், இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் நல்லாட்சி அரசாங்கத்தின் வலிமையானவர்கள்.
இவர்கள் ஐவருக்கும் பொதுவான காரணி ஒன்று உள்ளது. இவர்கள் நல்லாட்சியின் தலைவர்கள். ஏனெனில் அனுரகுமார திஸாநாயக்க நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்புக் குழுவின் தலைவராகவும் இருக்கின்றார். இன்றும் ஜனாதிபதியும் அனுரகுமார திஸாநாயக்கவும் எங்களிடம் பைல் (கோப்பு)இருக்கிறது என்று இரு பக்கங்களும் வாசிக்கிறார்கள்.
விஜயதாச ராஜபக்ச அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர். சரத் பொன்சேகா நல்லாட்சி அரசாங்கத்தின் வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர். சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர். இந்த ஐவரும் ஒன்றிணைந்து அறுபத்தொன்பது இலட்சம் மக்களை தோற்கடித்த நல்லாட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இவர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் ஒரே சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இவர்களில் ஒருவர் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் என்றால், 2019 ஆண்டில் 69 லட்சம் மக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை தோற்கடித்தமை வீணடிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறெனில் தொடர்ந்தும் அவர்களையே ஆட்சிபுரிய வைத்திருக்கலாம்” என்றார்.