உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுபவர்கள் சிறை செல்ல நேரிடும்: ரணில் அரசுக்கு சஜித் சிவப்பு எச்சரிக்கை

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுபவர்கள் சிறை செல்ல நேரிடும்: ரணில் அரசுக்கு சஜித் சிவப்பு எச்சரிக்கை

இந்த நாட்டு மக்கள் நீதி, நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கொண்ட யுகத்தை உருவாக்கும்போது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, நாட்டின் சட்டத்தை அப்பட்டமாக மீறிச் செயற்படுபவர்கள் சட்டத்துக்கு முகம் கொடுத்து கடும் தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்தார்.

பதுளை மாவட்டம், பசறை தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் பசறை நகரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நாட்டில் இன்று ஒரு வினோதமான அரசே காணப்படுகின்றது. இந்த அரசு உயர்நீதிமன்றத்தின் முடிவுகளை நிராகரித்துச் செயற்படுகின்றது. நாட்டின் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்களைப் பின்பற்றுகின்றார்கள் இல்லை.

பதில் ஜனாதிபதி, அவரின் வகுப்புச் சகாவான பிரதமர், சபாநாயகர், நாட்டைச் சீர்குலைத்த திருடர் தரப்பு ஆகியோர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, நாட்டின் சட்டத்தை அப்பட்டமாக மீறிச் செயற்படுகின்றனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் கூறும் சட்டமே இன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவர்கள் அரசமைப்பை அப்பட்டமாக மீறி வருகின்றனர். நாட்டின் சட்டம் மற்றும் அரசமைப்பை உதாசீனப்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் எண்ணுவது போல், அவர்கள் சொல்வது போல் நாட்டின் சட்டமாகக் கருதப்பட்டால் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே நான் அவர்களுக்குக் கூற வேண்டும்.

இந்த நாட்டு மக்கள் நீதி, நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கொண்ட யுகத்தை உருவாக்கும்போது, அரசமைப்பை மீறுபவர்கள் சட்டத்துக்கு முகம் கொடுத்து கடும் தண்டனையை எதிர்நோக்க நேரிடும்.

வாழ்க்கை நெருக்கடியில் தவிக்கும் மக்களுக்கு இப்போது தீர்வும் பதில்களுமே தேவை. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகு, நியாயமான காலத்துக்குள், துக்கம், அசௌகரியம், அழுத்தங்களைச் சந்திக்க நேரிடாத மக்கள் வாழ்க்கையை உருவாக்கித் தருவேன்.

மாளிகைகளில் சுகபோகமாக வாழும் நாட்டை ஆளும் பிரபுக்களுக்குச் சாதாரண மக்கள் படும் துன்பம் புரிவதில்லை. இவர்களுக்கு இரக்கமும் கருணையும் இல்லை. இவ்வாறான ஆட்சியாளர்களால் வங்குரோத்து நிலையில் உள்ள எமது நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

கருணை கொண்ட, மக்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் வலிமையான, ஆற்றல் மிக்க, நேரடியாக முடிவெடுக்கும் தலைவரும் அரசும் நாட்டுக்குத் தேவை.

நாம் மாளிகை அரசியல் விளையாடும் அரசியல்வாதியல்லாததால், அந்த மாளிகைகளை இலவசக் கல்வியின் கீழ் நவீன தொழில்நுட்பங்களைக் கற்பிக்கும் கல்வி நிலையங்களாக மாற்றி, இலவச உயர்கல்வி நிலையங்கள் மூலம் உலகையே வெல்லும் ஸ்மார்ட் மாண தலைமுறையை உருவாக்குவேன்.” – என்றார்.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் தலைவர்கள், மாவட்ட மற்றும் தொகுதிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This