வடக்கு ,கிழக்குப் பகுதிகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் காரணமென்ன?
வடக்கு,கிழக்கில் பொலிஸார் முன்னெடுத்துவரும் அராஜகமே வடக்கு,கிழக்கு மாகாணத்திற்கான பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவருவதற்கு காரணம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி. ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீபரிபூர்ண விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்ற போது அதில் பங்கேற்று கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் மிகவும் அமைதியாக அடக்கமாக இந்த விடயத்தை கையாள செல்கின்றபோது பொலிஸார் இங்கு வந்து பல்வேறு விதமான சிரமங்களை ஏற்படுத்தினார்கள் இடையூறுகளை செய்தார்கள்.ஆனால் அவர்கள் நீதிமன்ற தடை உத்தரவு எதுவும் கொண்டு வரவில்லை.
நாம் நஞ்சை கொடுக்கவில்லை கஞ்சி யே கொடுத்தோம் மக்கள் அதனை விரும்பி அருந்துவதற்கு உடன்பாடாக இருந்தார்கள் ஆனால் மக்களை விடாமல் வீதியின் இரு மருங்கிளும் நின்று கொண்டு தடுத்துக் கொண்டிருந்தார்கள். சமய உரிமை மத உரிமை வழிபாட்டு உரிமை இறந்த அல்லது கொல்லப்பட்ட ஆத்மாக்களை நினைவு கூரக்கூடிய உரிமை சகலருக்கும் உள்ளது இதனை தடுப்பதற்கு இவருக்கும் உரிமை இல்லை.
யுத்தம் நடைபெற்று இத்தனை அழிவு நடைபெற்று 146,000 மக்கள் காணாமல் ஆக்கப்பட்டும் கூட இன்னமும் பொலிஸார் திருந்தவில்லை இதனால் தான் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்று கோருகின்றோம்.
பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம் சுயநிர்ணய உரிமை சுயாட்சி வடகிழக்கு இணைப்பு என்றெல்லாம் பேசுவது இந்த அடக்குமுறையில் இருந்து விடுபட்டு நாங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக தான் என்றார்.