தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரம்: உறுதிகள் மறந்து விட்டதா?
மனிதக் கடத்தல்காரர்களால் ரஷ்யாவில் கூலிப்படையினராக அனுப்பப்பட்டவர்கள் மற்றும் தாய்லாந்தில் வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதாக கூறி மியன்மாரில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை காப்பாற்ற சில மாதங்களுக்கு முன்னர் செயல்படுத்தியிருந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் முற்றாக நிறுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை இணைத்துக் கொண்டு தேவையான ஏனைய அதிகாரிகளுடன் ரஷ்யா சென்று நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து அவருடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின் தலைமையிலான குழுவை மியான்மார் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் அனுப்பியிருந்தார்.
மனித கடத்தலில் சிக்கியவர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இருவரும் நம்பிக்கை அளித்தனர்.
தற்போது ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், மனித கடத்தலில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் பணியை முற்றாக கைவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாகவும் மாறியுள்ளது.