டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சிகள் 

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சிகள் 

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இக் கட்டுரை முன்னாள் மற்றும் பதவியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதிகள் மீதான படுகொலை முயற்சிகளை பட்டியலிடுகிறது)

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து நேற்று டொனால்ன் ட்ரம்ப் வரை, அமெரிக்க ஜனாதிபதிகளின் மீதான படுகொலை முயற்சிகள் மற்றும் சதிகள் ஏராளமாக நடந்துள்ளன.

அமெரிக்காவில் அரசியல் படுகொலை, படுகொலை முயற்சிகள் இது முதற்தடவையல்ல. ஆபிரகாம் லிங்கன், ஜெ எப் கென்னடி, மார்டின் லூதர் கிங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர்.

ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு :

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் பட்லர் நகரில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் டொனால்ட் ட்ரம்பின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. திறந்த மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட போது இலக்கு தவறி அவரது காது பகுதியில் தாக்கியுள்ளது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட ட்ரம்ப் கீழே குனிந்து தன்னை பாதுகாத்து கொண்டார். உடனடியாக விரைந்த பாதுகாப்பு தரப்பினர் மேலும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.

அடுத்த ஜனாதிபதி ட்ரம்ப் ?

துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் தப்பினார் ட்ரம்ப் என்றும், அடுத்த ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியாகிவிட்டது எனவும் சில ஊடகங்கள் சிலாகித்து எழுதத் தொடங்கிவிட்டன.

அமெரிக்க அரச கட்டமைப்புக்கு புறம்பாக செயற்படுவார் என நம்பபப்பட்ட ட்ரம்ப் நேட்டோவை பலவீனப்படுத்துவார் என்றும் ஊகிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்கனவே இருந்து வந்தது.

அத்துடன் ரஷ்யாவுக்கு ஆதரவாகச் செயற்படுவார் என்றும், உக்ரைன் யுத்தத்தை ரஷ்யாவுக்கு ஆதரவாக முடிவுக்கு கொண்டுவருவார் போன்ற காரணங்களால் இவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சமும் நீண்டகாலமாக இருந்தது.

இத்தகைய நிலையில் அனுதாப வாக்குகளிலாயே டொனால்ட் டிரம்ப் வெல்லக்கூடிய சாத்தியங்கள் தற்போது எழுந்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் படுகொலை:

ஜனவரி 30, 1835 இல், ஆண்ட்ரூ ஜாக்சன் ஒரு படுகொலை முயற்சியை அனுபவித்த முதல் ஜனாதிபதி ஆவார். அப்போது ரிச்சர்ட் லாரன்ஸ் இரண்டு முறை கேபிட்டல் நகரில் அவரை சுட முயன்றார். லாரன்ஸின் இரண்டு கைத்துப்பாக்கிகளும் தவறாக சுடப்பட்டதால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

வரலாற்றில் அமெரிக்காவின் நான்கு பதவியில் இருக்கும் ஜனாதிபதிகள் கொல்லப்பட்டனர். 1865 இல் ஆபிரகாம் லிங்கனை ஜான் வில்க்ஸ் பூத் என்பவர் சுட்டுக் கொன்றார்.

அதன் பின் இன்னோர் அதிபர் ஜேம்ஸ் ஏ. கார்ஃபீல்ட் 1881இல் சார்லஸ் ஜே. கிடோவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1901இல் வில்லியம் மெக்கின்லி எனும் ஜனாதிபதியை லியோன் சோல்கோஸ்ஸால் என்பவர் சுட்டுக் கொன்றார்.

பலத்த சர்ச்சை உருவாக்கிய ஜான் எஃப். கென்னடி கொலை 1963இல் லீ ஹார்வி ஓஸ்வால்ட் என்பவரால் நடாத்தப்பட்டது.

இற்றைவரை மூன்று ஜனாதிபதிகள் படுகொலை முயற்சியில் காயமடைந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் 1912, ஜான் ஷ்ராங்க் என்பவரால் காயமடைந்தார்.

பனிப்போர் காலத்தில் பிரபல்யமான ரொனால்ட் ரீகன் 1981, ஜான் ஹிங்க்லி ஜூனியர் என்பவரால் சுடப்பட்டு காயமடைந்தார்.

நேற்று டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் இடம்பெற்ற பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் காயங்களுடன் தப்பிக் கொண்டார்.

இந்த எல்லா நிகழ்வுகளிலும், தாக்குபவர்களின் ஆயுதம் ஒரு துப்பாக்கியாகவே இருந்துள்ளது.

ஆனால் இதுவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் மீது

பல படுகொலை முயற்சிகள் பல நடந்துள்ளன. அவற்றுள் பல தோல்வியுற்றும் உள்ளன.

இத்தாக்குதல்கள் அனைத்தும் அமெரிக்க அரசாங்கத்தின் தலைமையின் கொள்கையை மாற்றுவதற்கான விருப்பத்தால் தூண்டப்பட்டவை.எவ்வாறாயினும், அத்தகைய தாக்குதல்கள் அனைத்தும் அரசியல் காரணங்களைக் கொண்டிருக்கவில்லை.

பல தாக்குதலாளிகள் சந்தேகத்திற்குரிய மன நோயாளி நிலைத்தன்மையைக் கொண்டிருந்தனர். மேலும் சிலர் சட்டப்பூர்வமாக மன நோயாளிகளாக மதிப்பிடப்பட்டனர்.

ஆயினும் பெரும்பாலான படுகொலைத் திட்டம் தீட்டியவர்கள் கைது செய்யப்பட்டு மரணதண்டனை அல்லது சிறைச்சாலையில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டனர்.

உளவுத்துறை கவலையீனம்:

தேர்தல் பிரச்சாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மேடையில் இருந்து பாதுகாவலர்கள் புடை சூழ வெளியேறினார். இந்த தாக்குதலை அமெரிக்க நாட்டின் உளவுத்துறை உறுதி செய்துள்ளது.

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான முன்னாள் அதிபர் ட்ரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது. காதில் இருந்து ரத்தம் சொட்டிய நிலையில் தனது கையை உயர்த்தி காட்டினார். தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை மேடையில் இருந்து பத்திரமாக அழைத்து சென்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

இதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This