“வயதானவர்களை விரட்டியடிக்க வேண்டும்“ என்ற கூற்று தவறானது: அரசியல் விமர்சகர் ஜேவிபி மீது குற்றச்சாட்டு
ஜேவிபியின் அரசியல் கூட்டணி என அழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தியால் ஜூன் மாதம் 9ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் இலங்கை நடிகை ஒருவரான மனோஜா பெர்னாண்டோ தெரிவித்த விடயங்கள் மூலம் “முதுமையடைதல்” என்ற விடயம் அவமதிக்கப்பட்டதாகவும்,கேலிக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அரசியல் விமர்சகர் விபுல கருணாதிலக்க தெரிவித்தார்.
“Ideas front YouTube“ சேனலுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“எங்கள் வீட்டில் உள்ள தாத்தா மாதிரி ஒருவரே தற்போது நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்… முதலில் இந்த கிழவர்களை விரட்ட வேண்டும். இல்லையெனில், எங்களுக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை ஒரு போதும் அமைக்க முடியாது.” என்ற கருத்துக்கள் மூலம் மனித மாண்பு தொடர்பில் கட்சியின் கருத்து இதுவா? என்ற கேள்வி எழுப்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பதவியில் இருக்கும் ஒருவரை அழைக்க வேண்டிய விதம் அரசியல் காரணியாக இருந்தாலும், ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத முதுமை போன்ற விடயத்தைக் கூறி அவமானப்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவிப்பது எந்தவொரு நாட்டிலும் இடம்பெறவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நடிகை மனோஜா பெர்னாண்டோ விடுத்துள்ள இந்த இழிவான கூற்றை தேசிய மக்கள் சக்தி விரைவில் சீர்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியிலும் வயதானவர்கள் உள்ளனர். தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கும் மூத்தோர்கள் இவ்விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடிகை மனோஜாவின் கருத்து
அண்மையில் , பிரபல நடிகை மனோஜா பெர்னாண்டோ தேசிய மக்கள் சக்தி இளைஞர் பேரணியில் உரையாற்றும் போது கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.
இளம் சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக நாட்டை ஆண்ட சில முதியவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதே மனோஜா பெர்னாண்டோ தனது உரையில் முன்வைத்த கருத்தாக இருந்தது.
அவர் கூறிய இந்த கருத்து சமூக வலைதளங்களில் நேர்மறையாகவும், மற்றொரு வகையில் எதிர்மறையான விமர்சனமாகவும் பரிமாறப்பட்டது.
இருப்பினும், பதிலைக் கருத்தில் கொண்டு, அவர் தனது சமூக ஊடக தளங்களில் மற்றொரு விரிவான குறிப்பை வெளியிட்டார்.
குறிப்பு கீழே…
”உலகில் யார் அரசியல் செய்கிறாரோ அவருக்கு எந்த புயலையும் தாங்கும் வலிமையும் தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
அந்த வலிமையை, இந்த நேரத்தில் நான் அனுபவிக்கிறேன்.
நான் முதன்முதலில் அரசியல் களத்தில் இறங்கியபோது என் தந்தையும் இதைத்தான் சொன்னார்.
தந்தை சொல்வது சரிதான்..
அரசியல் கல்வியறிவு இல்லாத நாட்டில் அரசியல் கருத்தை சமூகமயமாக்குவது எளிதான காரியம் அல்ல.
அதிலும் இலங்கை போன்ற ஊழல் அரசியல் தலைவிரித்தாடும் நாட்டில் ஒரு பெண்ணாகவும், இளம் பெண்ணாகவும் அரசியல் கருத்துக்களை பகிர்ந்துகொள்வது மிகவும் கடினமான பணியாகும்.
மேலும், இளைஞர் பேரணியில் உரையாற்றும் போது நான் குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் நாட்டிலுள்ள அனைத்து பெரியவர்களுக்கானது அல்ல.
அப்படி கூறியிருந்தால்,
உரையின் முடிவில், “அன்று நம்மைப் போல் வெளி வந்த இளைஞர்கள் இன்று நம்முடன் மூத்த தலைமுறையாக கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என கூறத் தேவையில்லை.
ஆகவே, 76 வருடங்களாக நாட்டின் சட்டங்கள் இயற்றப்பட்ட பாராளுமன்றத்தில் இருந்து இந்த நாட்டை ஆண்ட ஊழல் ஆட்சியாளர்களை , அல்லது பல தலைமுறைகளின் வாழ்க்கையை வீணடித்த முதியவர்களை விரட்ட வேண்டும் எனக் கூறியது அரசியல் எழுத்தறிவும் மூளையும் உள்ள ஒருவருக்கு நன்றாகப் புரியும். ” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.