ட்ரம்ப் மீதான கொலை முயற்சி – மேலும் பல தகவல்கள் வெளியாகின!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. பென்சில்வேனியாவின் பட்லர் என்ற இடத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவரின் வலது காதில் காயமேற்பட்டது. துப்பாக்கிதாரி கட்டடம் ஒன்றின் கூரைமீது பதுங்கியிருந்து இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பிற்கு பாதுகாப்பு வழங்கிவந்த இரகசியதுறை அதிகாரி நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில், குறித்த துப்பாக்கிதாரி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பார்வையாளர் ஒருவரும் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் முன்னணி உறுப்பினரான டொனால்ட் ட்ரம்ப் கன்னத்தில் இரத்தக்கறையுடன் நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளதுடன், இவ்வாறான வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமளிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் டொனால்ட் ட்ரம்புடன் நேரடியாக தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை கேட்டறிந்து கொண்டதாகவும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிந்திக் கிடைத்த செய்திகளுக்கு அமைய கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குறித்த அடையாளங்களை அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் பெத்தெல் பூங்கா பகுதியைச் சேர்ந்த 20 வயதான தோமஸ் மத்யூ குரூஸ் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.