சைபர் கிரைம் மையமாக மாறியுள்ள நீர்கொழும்பு: மேலும் 31 வெளிநாட்டவர்கள் கைது

சைபர் கிரைம் மையமாக மாறியுள்ள நீர்கொழும்பு: மேலும் 31 வெளிநாட்டவர்கள் கைது

நீர்கொழும்பு – கொக்கபடுவ பகுதியில் உள்ள மற்றுமொரு ஹோட்டலை சுற்றிவளைத்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் சந்தேகத்தின் பேரில் 31 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், அவர்களிடம் இருந்து 30 கணினிகள் மற்றும் 80க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சீனப் பெண்ணும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் வெளிநாட்டு பயண பதிவுகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 நாட்களாக நீர்கொழும்பு பகுதியில் உள்ள நான்கு ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 150 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பாகிஸ்தான், நைஜீரிய, நேபாள, மலேசிய, இந்திய, பங்களாதேஷ் மற்றும் சீன பிரஜைகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இணையக் குற்றவாளிகள் தாங்கள் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் தங்கக்கூடிய பிரதேசமாக நீர்கொழும்பை அடையாளப்படுத்தியிருப்பது கடந்த சில நாட்களாக நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இருந்து தெரிகிறது.

தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் குறித்த தகவல்களை வீட்டு உரிமையாளர்கள் வேண்டுமென்றே பொலிஸ் நிலையங்களுக்கு வழங்காத காரணத்தினால் குற்றவாளிகள் இங்கு தங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This