உக்ரைனுக்கு எதிராக கூலிப்படையாக போரிடும் இலங்கையர்கள்: ரஷ்யாவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

உக்ரைனுக்கு எதிராக கூலிப்படையாக போரிடும் இலங்கையர்கள்: ரஷ்யாவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

உக்ரைனுக்கு எதிரான போரில் போராடும் முன்னாள் இராணுவ வீரர்களை தானாக முன்வந்து நாடு திரும்ப அனுமதிக்குமாறு ரஷ்யாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

உத்தியோகபூர்வ தூதுக்குழு கடந்த வாரம் மொஸ்கோவில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்ய போரில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் பங்கெடுத்துள்ளதாகவும், அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் இலங்கையின் நாடாளுமன்றில் கடந்த மாதம் பேசப்பட்டதுடன், அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, கடந்தவாரம் ரஷ்யாவிற்கு சிறப்பு தூது குழு சென்றிருந்ததுடன், அங்குள்ள அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டிருந்து.

இந்த கலந்துரையாடலின் போது இலங்கையர்களைக் கண்காணிப்பது, காயமடைந்தவர்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே, உக்ரைனில் சுமார் ஒரு டஜன் இலங்கையர்கள் போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நூற்றுக்கணக்கான இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் உக்ரைன் – ரஷ்ய போரில் கூலிப் படைகளாக இணைந்துகொண்டனர்.

ரஷ்ய கூலிப்படை நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு முகவர்களாக செயல்பட்டதற்காக ஓய்வுபெற்ற இரண்டு இலங்கை ஜெனரல்களையும், அவர்களுக்கு தளவாடங்களுடன் உதவியதாகக் கூறப்படும் ஆறு பேரையும் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This