உருகும் ஆபிரகாம் லிங்கன் சிலை !
அமெரிக்காவின் வொஷிங்டனில் ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி வருகிறது. அங்கு நிலவி வரும் அதீத வெப்பம் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது உருகி வரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் ஆறு அடி மெழுகு சிலை அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை போலவே வடிவமைக்கப்பட்டதாகும். அந்த சிலையின் தலை பகுதி, கால்கள் தற்போது உருகி உள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அங்கு நிலவியதாக வானிலை மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.கடந்த பெப்ரவரி மாதம்தான் இந்த வெள்ளை நிற மெழுகு சிலை வடமேற்கு வொஷிங்டன் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க கைவினை கலைஞர் சான்டி வில்லியம்ஸ் வடிவமைத்துள்ளார். சிலையின் தலை பகுதி உருகிய நிலையில் அது கீழே விழுந்து சேதமடையாத வகையில் அதனை பத்திரப்படுத்தி உள்ளனர் தன்னார்வலர்கள்.
மேலும், சிலை வடிவமைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள மெழுகு சிலை 140 டிகிரி வெப்பம் வரை தாங்கும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்துள்ளனர்.அமெரிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளின் வெப்பத்தின் தாக்கம் அதி தீவிரமாக காணப்படுகிறது. மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வசிக்கும் இந்த மாதம் அதீத வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என வானிலை அறிக்கைகள் தெரிவித்தன. அதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு நாட்களாக அந்த வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES உலகம்