தொடரும் சர்ச்சை.. தென் கொரிய விமான நிலையத்தை முடக்கிய வட கொரிய குப்பை பலூன்கள்

தொடரும் சர்ச்சை.. தென் கொரிய விமான நிலையத்தை முடக்கிய வட கொரிய குப்பை பலூன்கள்

வட கொரியா அனுப்பி வரும் குப்பைகள் நிரம்பிய பலூன்களால் தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையம் முடங்கும் சூழல் உருவானது. தொடர்ச்சியாக குப்பைகள் அடங்கிய பலூன்கள் விமான நிலையத்திற்குள் நுழைந்ததை அடுத்து, விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்பட்டு செல்வதிலும் கால தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக ஓடுபாதைகள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் மட்டுமின்றி அதன் எல்லை பகுதிகளிலும் வட கொரியாவின் குப்பைகள் அடங்கிய பலூன்கள் ஏராளமாக குவிகின்றன. குப்பைகள் நிரம்பிய பலூன்களால் அந்த பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் வட கொரியா தென் கொரியாவிற்குள் குப்பைகள் அடங்கிய பலூன்களை அனுப்பி வருகிறது. முன்னதாக வட கொரியாவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தென் கொரியா சார்பில் பலூன்கள் அனுப்பப்பட்டன.

இவைகளில் வட கொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய காகிதங்கள் இடம்பெற்று இருந்தன. இதோடு எல்லை பகுதியில் வட கொரியாவுக்கு எதிரான இசையை தென் கொரியா ராட்சத ஒலிப்பெருக்கிகள் மூலம் இசைத்தது.

தென் கொரியாவின் பலூன் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே வட கொரியா பலூன்களில் குப்பைகளை அனுப்ப தொடங்கியது. அதன்படி தற்போது வட கொரியா அனுப்பிய பலூன்களால் தென் கொரிய விமான நிலைய செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

CATEGORIES
Share This