பாலின சமத்துவம் தவறில்லை: பிரித்துப் பார்ப்பது தவறு என்கிறார் கர்தினால்
ஒருவரால் தமது பாலினத்தை தேர்ந்தெடுக்க முடியாது, நாம் பிறந்த பாலினத்தின்படி வாழ வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு முக்கிய சட்டமூலங்கள் தொடர்பில் தற்போது பல விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன.
அவற்றுள் ‘பெண்கள் வலுவூட்டும் சட்டமூலம்’ ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மூன்றாவது வாசிப்பின் பின்னர் திருத்தங்களுடன் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.
இது தொடர்பில் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கர்தினால்,
” எங்களுடைய கலாசாரத்தில் பாலின சமத்துவம் என்பதனை பிரித்து வேறு குழுவாக்கி பார்ப்பது தவறு.
ஒருவரால் தமது பாலினத்தை தேர்ந்தெடுக்க முடியாது. ஆகவே அவரை நாம் சமூகத்திலிருந்து வேறுபடுத்தாது, அவரை அன்புடன் நடத்த வேண்டும்.
அவருடன் சகோதரத்துவத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
ஒருவரால் தமது பாலினத்தை தேர்ந்தெடுக்க முடியாது, நாம் பிறந்த பாலினத்தின்படி வாழ வேண்டும்.
இதற்கு பொருளாதார ரீதியில் வலுவடைந்த நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். இருந்தாலும் இலங்கை ஒரு சுயாதீனமான நாடு அத்தகைய நாட்டில் எங்களுக்கு தீர்மானங்களையும் சயாதீனமாக எடுக்க முடியும்.
மற்றுமொரு நாடு தடுக்கிறது என்பதற்காக நாமும் அதையே செய்ய வேண்டும் என எந்த நியதியும் இல்லை.” என தெரிவித்தார்.