கொழும்பை புரட்டப்போகும் அரசியல் சூறாவளி: அடுத்தடுத்து கட்சித் தாவல்கள் – அனுரவின் புதிய வியூகம்
இலங்கை அரசியலில் தீர்மானமிக்க அரசியல் மாற்றங்கள் ஏற்படும் வாரமாக இந்த வாரமும் எதிர்வரும் வாரமும் அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை மக்களுக்கு ஆற்ற உள்ள உரையின் பின்னர் பல்வேறு மாற்றங்கள் அரசியல் அரங்கில் ஏற்பட உள்ளன.
தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரட்ன, சரத் பொன்சேகா ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்க்க உள்ளதாக தெரியவருகிறது.
ரணில் களமிறங்க உள்ளார்
நாளை வியாழக்கிழமை மூன்று முக்கிய நபர்கள் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜித சேனாரட்ன மற்றும் சரத் பொன்சேகாவுடன் சம்பிக்க ரணவக்கவும் ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக ஆளுங்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சுப் பொறுப்புகளை பெற்றுக்கொண்ட பின்னர் இவர்களுடன் தேசிய அரசாங்கத்தை ரணில் விக்ரமசிங்க அமைக்க உள்ளதுடன், குறித்த தேசிய அரசாங்கத்தின் பொது வேட்பாளராக ரணில் களமிறங்க உள்ளார்.
எதிர்வரும் 2ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஸ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கோரிக்கை விடுத்ததுடன், அதன் பிரகாரம் நாடாளுமன்ற அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தை ஆரம்பம்
இந்த அமர்வில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக 10 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன், கைகோர்க்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 2ஆம் திகதி வெல்லவாயவில் பிரமாண்ட பொது கூட்டமொன்று ஜனாதிபதிக்கு ஆதரவாக நடத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலர் மேடையேற உள்ளதாக தெரியவருகிறது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் எதிர்வரும் 29ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார்.
களுத்தறையில் பாரிய பொதுக் கூட்டமொன்றை நடத்த தேசிய மக்கள் சக்தி ஏற்பாடுகளை செய்துவருகிறது. இதில் களுத்தறையில் என்றுமில்லாதவாறு மக்கள் தொகையை கூட்ட அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இது அனுரகுமார ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்கும் கூட்டமாக இருக்கும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று தொடர்ச்சியாக இலங்கை முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்த தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ளதுடன், எதிர்வரும் ஜுலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரகடனத்தை வெளியிடவும் தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன.