“முன்னாள் ஜனாதிபதியின் மகன் என்பதற்காக ஜனாதிபதி வேட்பாளர் ஆக முடியாது”: சஜித்தை மறைமுகமாக தாக்கிப் பேசிய பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்படி, தன்னை நாடாளுமன்றில் பேசவிடாமல் தடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நேரம் கோரிய போதிலும், தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவீர்களா என எதிர்க்கட்சி பிரதம கொறடா தன்னிடம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு நாடாளுமன்றில் பேசுவதற்கு நேரம் வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் ஆதரவுடன் தனக்கு பேசுவதற்கு நேரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்விலும் எதிர்க்கட்சியில் ஒருவர் 30 நிமிடங்கள் பேசுகிறார் என பிரேமதாசவின் பெயரைக் குறிப்பிடாமல் பொன்சேகா சுட்டிக்காட்டியிருந்தார்.
கட்சித் தலைவர் அல்லது முன்னாள் ஜனாதிபதியின் மகன் என்பதற்காக ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக இருக்க முடியாது. தான் ஒரு மக்கள் பிரதிநிதியாகவே நாடாளுமன்றத்தில் இருக்கின்றேன்.
இந்நிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் போது மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் எனவும் பொன்சேகா பொதுமக்களை வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், இதற்கு பதிலளித்துப் பேசிய லக்ஷ்மன் கிரியெல்ல, சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக பேசவில்லை எனவும் மாறாக அவைத்தலைவரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் பிரேமதாசவுக்கு சில சலுகைகள் இருப்பதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியிருந்தார்.