ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தமையே கட்சி பிளவுபடுவதற்கு முக்கிய காரணம்
ஆட்சியை கைப்பற்றுவதற்காக, கொள்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தமை தம்முடைய கட்சி பிளவுபடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து தயார்ப்படுத்தல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நான் தேசிய பட்டியலின் ஊடாக போட்டியிடவுள்ளேன். கட்சி என்ற வகையில் எம்முடைய வேட்பாளர்களை வெற்றியடையச்செய்வது என்னுடைய கடமையாகும்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தமை எம்முடைய கட்சி பிளவு படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆனால் அப்போதும் நாம் நாட்டுக்காக எடுக்க வேண்டிய முடிவை சிறந்த முறையில் எடுத்தோம். நாட்டில் அரசியல் இஸ்தர தன்மையை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை நாம் முன்னெடுத்தோம்.
ராஜபக்ஷர்களின் அரசியல் பயணம் நிறைவடையப்போகின்றதா? இல்லையா என்ற விடயத்தை மக்களே தீர்மானிப்பர். நாம் இதற்கு முன்னரும் கூட தோல்வி அடைந்திருக்கின்றோம். மொட்டுக்கட்சி சார்பாக தற்போது புதிய தரப்பினரே களமிறக்கப்பட்டுள்ளனர். ஆட்சியை கைப்பற்றுவதற்காக நாம் எந்த சந்தர்ப்பத்திலும் கொள்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை.