புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறைகள் சர்வகட்சிக் கூட்டத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும்

புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறைகள் சர்வகட்சிக் கூட்டத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும்

தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாக விளக்கும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் ஒருபோதும் நீக்கப்படக்கூடாது எனவும், புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறைகள் சர்வகட்சிக்கூட்டத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அச்செயன்முறைகள் 13 ஆவது திருத்தத்தின் அம்சங்களை மேலும் செழுமைப்படுத்தும் வகையிலேயே அமையவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் ‘அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை முடிவுக்குக்கொண்டுவரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமத்துவ உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி, புதன்கிழமை (4) கொழும்பிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

‘இலங்கையில் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வாக 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகக் கிடைக்கப்பெற்ற மாகாணசபை முறைமையை நீக்குவது குறித்து தற்போது அரசியல் ரீதியில் பேசப்பட்டுவருகிறது.

மாகாணசபை முறைமை நீக்கப்படுவதை நாம் முற்றாக எதிர்ப்பதுடன், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தமானது அரசியல் தீர்வுக்கான சிறந்ததொரு ஆரம்பப்புள்ளியாக அமையும் என்றே நாம் கடந்த காலங்களிலும் கூறிவந்திருக்கிறோம். இருப்பினும் சில அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளால் எட்டாக்கனியாக மாறியிருக்கும் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்’ என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை 13 ஆவது திருத்தம் இரத்துச்செய்யப்படும் எனவும், புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் உள்வாங்கப்படும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர் கூறியிருக்கும் பின்னணியில், அச்செயன்முறையானது சர்வகட்சிக்கூட்டத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.

அதுமாத்திரமன்றி சர்வகட்சிக்கூட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறைகள், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் உள்ள முக்கிய அம்சங்களை செழுமைப்படுத்தும் விதத்திலேயே அமையவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This