கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ள இந்திய அரசாங்கம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ள இந்திய அரசாங்கம்!

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாக இந்தியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதியளித்துள்ளார்.

இதற்கான திட்ட அறிக்கைகள் மற்றும் கோரிக்கைகள் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக முன்வைக்கப்படவேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

இந்திய உயர் ஸ்தானிகர் இன்று மாலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு விஜயம்செய்தார்.

பதில் உபவேந்தர் கலாநிதி ரீ. பிரபாகரன்; தலைமையிலான பிரமுகர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

இதையடுத்து கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்தினருடன் விசேட சந்திப்பு நடைபெற்றது.

உயர் ஸ்தானிகரின் மனைவி தனுஜா ஜா, ஆலோசகர்களான எல்டோஸ் மெத்தியு, நாகராஜா ராமசாமி மற்றும் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.பகிரதன் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு இந்திய உயர் ஸ்தானிகர் கருத்துத் தெரிவிக்கையில் – கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தனது முதலாவது விஜயம் இதுவாகும். இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா செய்துள்ள உடன்படிக்கைக்கமைவாக இலங்கை மாணவர்கள் இந்தியாவிலும் இந்திய மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்பதற்கு வாயப்பு வழங்கப்படவுள்ளது என்றார்.

இதன்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூறு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதியாக இந்தியஅரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முப்பது இலட்சம் ரூபாவிற்கான காசோலை சம்பிரதாயபூர்வமாக அந்த மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

CATEGORIES
Share This