யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்கள் காணாமல் போனதன் பின்னணியில் ‘இராணுவத்தின் கை’: சிறிதரன் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் முதியவர்கள் மற்றும் பிரபல வர்த்தகர்கள் திடீரென காணாமல் போனதன் பின்னணியில் இராணுவத்தின் மறைமுகமான கரங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இரண்டு வர்த்தகர்கள் உட்பட மூவரின் தகவல்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்து வடக்கின் தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அண்மையில் காணாமல்போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிப கோடீஸ்வர வர்த்தகருக்கு அரசாங்கத்தினால் தேசமான்ய விருதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
“யாழ்ப்பாணம், புங்குடுதீவு, மடத்துவெளியைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரும், இலங்கை அரசாங்கத்தால் தேசமான்யய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவரும், வைத்தியலிங்கம் கனகலிங்கம், வயது 82. அவர் மே 12, 2024 அன்று, மதியவேளை மடத்துவெளியில் உள்ள தனது வீட்டின் முன்பாக இருந்வேளை திடீரென காணாமல்போயுள்ளார்.
பிரிதொருவரின் உதவியின்றி நடந்து செல்லவோ அல்லது வாகனத்தில் ஏறவோ முடியாதவர் திடீரென வாசலில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளமை மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.”
ஆறு மாதங்களுக்கு முன்னர் இதே பிரதேசத்தில் இருந்து காணாமல் போன பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீ தரன் தெரிவித்துள்ளார்.
“யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9 வட்டாரம் பகுதியில் வசிக்கும் யோகம்மாள் சோபிநாதன். வயது 63. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். அவர் இருக்கும் இடம் தெரியவில்லை.”
ஏழு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தமிழ் மக்களின் பிரதிநிதி, பல்வேறு வழிகளில் தேடியும் அவரது தலைவிதியை கண்டுபிடிக்க முடியவில்லை என வலியுறுத்தியுள்ளார்.
“சடையாளி, சிவன் கோயிலடி, காரைநகர், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல வர்த்தகரான வேலுப்பிள்ள நடராசா, 63 வயது, 2017 ஜூலை 21 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் மாதாந்த வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றபோது காணாமல்போயுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு, பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமான விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டும் ஏழு வருடங்கள் ஆகியும் எந்த முடிவுகளும் கிட்டவில்லை.”
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் ஆட்கடத்தல்கள் மற்றும் கைதுகளின் பின்னணியில் இராணுவத்தின் மறைமுகமான கரங்கள் செயற்படுவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அதற்கு பொலிஸாரின் ஆதரவு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
“யாழ்ப்பாண மண்ணிலே இந்த மூன்று வயோதிபர்களும் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் காணாமல் போயிருக்கக்கூடும். அவர்களைப் பற்றிய தகவல் தெரியவில்லை. அவை வெளியில் வரவில்லை.
தொடர்ந்து இடம்பெறும் கடத்தல்கள், கைதுகள் அல்லது வாள்வெட்டு சம்பவங்கள் என்பது மலிந்த இடமாக யாழ்ப்பாண மண் இருக்கிறது. இதன் பின்னணியில் இராணுவத்தின் மறைகரம் இருக்கிறது. பொலிஸாரின் அவர்களுக்கான ஒத்துழைப்பு இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அவர்கள் தயாராக இல்லை என்பதைத்தான் இந்த செய்திகள் சொல்லுகின்றன.”