பொசன் பௌர்ணமி தினத்தன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் அனைத்து மதுபானங்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், கலால் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் தெரிவுசெய்யப்பட்ட புனித வலயங்களில் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை மதுபானங்களை விற்பனை செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படுவதோடு, தம்புள்ளை மற்றும் திஸ்ஸமஹாராம நகர சபைக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பொசன் பண்டிகை வலயங்களில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 22 ஆம் திகதி சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனுராதபுரம் புனித நகரை உள்ளடக்கிய மத்திய நுவரகம், கிழக்கு நுவரகம மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேச செயலகங்கள் பிரிவுகளில் குறித்த காலப்பகுதியில் ஏழு நாட்களுக்கு மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது.
அனைத்து உரிமம் பெற்ற மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்கள் இந்தக் காலப்பகுதியில் மூட உத்தரவிடப்படும் என்றும், கலால் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.