தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்து அரசு அனுமதி
தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது தாய்லாந்து அரசு. இதன் மூலம் இந்த வகை சட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று இந்த அறிவிப்பு வெளியானது.
இதற்கான சட்ட மசோதாவை அந்த நாட்டின் செனட் மேல்சபை உறுப்பினர்கள் ஜூன் 18 வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றினர். இது குறித்த தகவல் அந்த நாட்டின் அரசிதழில் முறைப்படி இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக தன்பாலின ஆர்வலர்கள் மற்றும் எல்ஜிபிடி சமூகத்தினர் ஒன்று கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது வானவில் கொடியையும் காற்றில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர். இது வரலற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜூன் மாதம் தொடங்கியதும் பாங்காக் நகர வீதிகளில் எல்ஜிபிடி கம்யூனிட்டியினர் பேரணியாக சென்றனர். இந்த கொண்டாட்டத்தில் அந்த நாட்டின் பிரதமர் ஸ்ரேத்தா தாவிசின் வானவில் சட்டையை அணிந்து பங்கேற்றார்.
இது மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் தாய்லாந்தின் பங்கினை உலக நாடுகளுக்கு சுட்டிக்காட்டும் என அந்த நாட்டைச் சேர்ந்த தன்பாலின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.