2009 ஆம் ஆண்டு அழிவுகள் மீள்நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை நிலைநாட்டல் இன்றியமையாதது

2009 ஆம் ஆண்டு அழிவுகள் மீள்நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை நிலைநாட்டல் இன்றியமையாதது

இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைகள் மற்றும் மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும் என ‘நோ ஃபையர் ஸோன்’ ஆவணப்படத்தின் இயங்குநர் கெலம் மக்ரே வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றக்காணொளிகளுடன் கூடியதாக கெலம் மக்ரேவினால் தயாரிக்கப்பட்ட ‘நோ ஃபையர் ஸோன்’ என்ற ஆவணப்படம் 11 வருடங்களுக்கு முன்னர் ‘சனல் 4’ என்ற தொலைக்காட்சி சேவையில் வெளியாகி பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது.

இந்நிலையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இவ்வருடத்துடன் 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருப்பதை முன்னிட்டு கெலம் மக்ரே வெளியிட்டுள்ள நினைவுச்செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:

யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்களின் பின்னர், அதனை நாம் மேமாதம் 18 ஆம் திகதி நினைவுகூருகின்றோம். இருப்பினும் தமிழ் மக்களுக்கு எதிரான மீறல்கள் தொடர்கின்றன. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் அதனால் ஏற்பட்ட தாக்கத்துடனேயே தொடர்ந்து வாழ்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான உரிமை இலங்கை அரசினால் மறுக்கப்படுகின்றது. அதேபோன்று இன்றளவிலேயே தமிழர் தாயகப்பகுதிகள் பாதுகாப்புத்தரப்பினரின் வலுவான கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றது.

எனவே முன்னெப்போதையும்விட இப்போது உண்மை மற்றும் நீதி என்பன உடனடியாக உறுதிப்படுத்தப்படவேண்டியது மிகவும் அவசியமாகின்றது. 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும். இதேபோன்ற சம்பவங்களே இன்று காஸாவில் இடம்பெறுகின்றன. காஸாவில் வாழும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என சகல மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசாங்கம் மிகமோசமான மீறல்களைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் அடைந்திருக்கும் தோல்வி, தற்போது காஸாவில் இடம்பெற்றுவரும் அதனையொத்த மீறல்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. மனித உரிமைககள் மற்றும் நீதிக்கு மதிப்பளிக்கும் சகலரும் ‘இனி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறக்கூடாது’ என்பதையே வலியுறுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This