இலங்கைவரும் ஜெய்சங்கர் திருமலை செல்கிறார்; விசேட பாதுகாப்புக்கும் ஏற்பாடு
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை வியாழக்கிழக்கிழமை இரண்டுநாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
இவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளதாக புதுடில்லி அறிவித்துள்ளதுடன், இலங்கையில் எஸ்.ஜெய்சங்கர் செல்லும் இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் எஸ்.ஜெய்சங்கர் திருகோணமலைக்கும் செல்ல உள்ளதாக தெரியவருகிறது.
திருகோணமலையில் இந்திய அரசாங்கத்தின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை ஜெய்சங்கர் ஆய்வு செய்ய உள்ளதுடன், எதிர்காலத்தில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்த உள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் ஜெய்சங்கர் கலந்துரையாட உள்ளார்.
அத்துடன், தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஜெய்சங்கருடனான கலந்துரையாடல்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருசில தமிழ் கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்திப்பார் என தெரியவருகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த பின்புலத்தில் அவரது வருகைக்கு முன்னதான ஆய்வுகளை நடத்தவே ஜெய்சங்கரின் திடீர் இலங்கை விஜயம் இடம்பெறுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.