“சதை உண்ணும் பக்டீரியா“ நோய் பரவல்: இலங்கை மக்கள் பீதியடைய தேவையில்லை
ஜப்பான் முழுவதும் தற்போது பரவிவரும் “சதை உண்ணும் பக்டீரியா“ நோய் தொடர்பாக இலங்கை மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை சுகாதார அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டை பொறுத்தவரை இந்த நோயால் சுமார் 1000 மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சமிதாகினிகே, இந்த நோய் கடுமையாக பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும் இது ஒரு அசாதாரணமான நிலை அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வைத்தியர்,
பல்வேறு வகையான பக்டீரியாக்கள் அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் பரவுகின்ற போதிலும் அதில் சில வகையான பக்டீரியாக்கள் சிகிச்சையளிக்க கூடியது என்பதை பொதுமக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
சில நேரங்களில் குறித்த தொற்று பரவல் ஆபத்தை ஏற்படுகிறது. மற்றும் உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு விரைவாக முன்னேறலாம்.
ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், குளிர், தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும், இது 24 முதல் 48 மணி நேரத்திற்குள் குறைந்த இரத்த அழுத்தம், உறுப்பு செயலிழப்பு மற்றும் விரைவான இதய துடிப்பு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு ஆளாக்கலாம்.
பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் தோராயமாக 30 சதவிகிதம் என்றும் ஜப்பான் சுகாதார அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 30 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், இலங்கையின் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருப்பார்கள் என்றும், வெளிவரும் எந்தவொரு சுகாதார அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் வைத்தியர் சமிதா கினிகே தெரிவித்துள்ளார்