உயிருடன் இருக்கும் இலங்கை அகதியை இறந்துவிட்டதாக அறிவித்த அதிகாரிகள்!
வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் உயிருடன் இருக்கும் இலங்கை அகதி ஒருவரை இறந்துவிட்டதாக அறிவித்துள்ள அரசு அதிகாரிகள், தமிழ்நாட்டில் நிரந்தர குடியிருப்புக்கான அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க மறுத்துள்ளமை தொடர்பான செய்தியொன்று வௌியாகியுள்ளது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் நல ஆணையர் அலுவலகம் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியடைந்த அவரது அத்தை, சிறப்பு முகாமில் தனது மருமகன் உயிருடன் இருப்பதாகக் கூறி தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
மதுரை, உச்சப்பட்டியைச் சேர்ந்த டி.நாகேஸ்வரி சார்பில், வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், 1990ல், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்கு பயந்து, மனுதாரரும், அவரது குடும்பத்தினரும், இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர்.
தற்போது, உச்சப்பட்டியில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் நாகேஸ்வரி தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
ஜூலை 20, 2015 அன்று, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் அவரது மருமகன் கந்தன் என்கிற கிருஷ்ணகுமார் ராமநாதபுரத்தில் கியூ-பிராஞ்ச் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
2018ல் ராமநாதபுரம் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேல்முறையீட்டில், உயர் நீதிமன்றம் தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்தது.
தண்டனை முடிந்ததும் கந்தன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
1990 ஆம் ஆண்டு முதல், அவரும் அவரது குடும்பத்தினரும் பதிவு செய்யப்பட்டு அகதிகள் முகாமில் வாழ அனுமதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நாகேஸ்வரி, இப்போது தனது மருமகனை தன்னுடன் தங்க அனுமதிக்க தயாராக இருப்பதாக அதிகாரிகளிடம் கூறினார்.
ஆனால், ஏப்ரல் 17 அன்று, காந்தன் இறந்துவிட்டதாக அதிகாரிகளிடம் இருந்து அவருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கந்தன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கூறி நாகேஸ்வரி நீதிமன்றத்தை நாடி உள்ளார். இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.