லண்டன் பயணமானார் அனுர: புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கிறார்

லண்டன் பயணமானார் அனுர: புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கிறார்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை அதிகாலை (13.06.2024) லண்டன் பயணமானார்.

எதிர்வரும் 15ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு லண்டன் கிறிஸ்டர் கிராண்டில் முக்கிய பொதுக்கூட்டத்தில் இவர் கலந்துகொள்ள உள்ளார்.

இந்தப் பயணத்தில் இங்கிலாந்தில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுடனான பல வர்த்தக சந்திப்புகள் மற்றும் சிநேகபூர்வ சந்திப்புகளை அனுரகுமார நடத்த உள்ளார்.

நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் தேசிய தேர்தல்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களையும் இவர் நடத்த உள்ளார்.

இலங்கையில் தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பை ஏற்று அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு சென்றதுடன், அதன்பின் இலங்கையில் இருந்து தமிழ் மக்கள் அதிகமாக புலம்பெயர்ந்து வாழும் கனடாவுக்கும் அவர் சென்றிருந்தார்.

அங்குள்ள தமிழ் மக்களுடனும் அனுரகுமார சந்திப்புகளை நடாத்தியிருந்தார் என்பதுடன், அவர்களது அரசியல் அபிலாஷைகள் குறித்தும் அறிந்துக்கொண்டார்.

இதன்பின்னர் சுவீடனின் ஸ்டோக்கோமிலும் இலங்கை புலம்பெயர் சமூகத்தினரை சந்தித்திருந்தார். அவர் அதிகமாக புலம் பெயர் சமூகத்தினரிடையே பிரச்சாரங்கள் முன்னெடுத்து வருகின்றதை காணமுடிகின்றது.

கடந்த ஜனவரி மாதம் சுகாதார கொள்கை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் அனுரவுக்கான மக்கள் ஆதரவு 40 வீதமாக உயர்வடைந்துள்ளதாக தெரியவந்தது.

புலம்பெயர் நாடுகளில் அனுரவுக்கான ஆதரவு அதிகரித்து வருகின்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இதனால் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் அடுத்தடுத்து இடம்பெறவுள்ள நிலையில், அனுரகுமார திஸாநாயக்க எதிர்கட்சித் தலைவராவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்றாலும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறுவார் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This