5 வருடங்களை 6 ஆண்டுகளாக நீடிக்க முடியுமா?: அரசியலமைப்பு கூறுவதென்ன?
”ஒரு கட்சியாக தேர்தலை ஒத்திவைப்பதை நாம் எதிர்க்கிறோம்,“ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
தற்போது அனைவரும் 13 இல் தொங்கிக் கொண்டிருந்தாலும் தோற்கப் போகின்றோம் எனத் தெரிந்தும் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்திய முதல் தலைவர் மகிந்த ராஜபக்ச மாத்திரமே எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஆறு வருடங்களாக நீடிக்க முடியாது என்பதால் யாப்பின்படி இவ்வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள இரு உறுப்புரைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதிக்கு ஆறு வருடங்கள் பதவியில் நீடிக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா என்ற விவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆரம்பிக்கப்பட்டுள்ள புது விவாதம்?
ஆறு வருடங்களாக காணப்பட்ட ஜனாதிபதியின் பதவிக் காலம் 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என அரசியலமைப்பின் 32 ஆவது பிரிவில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசியலமைப்பின், 83 (பி) இல் கூறப்பட்டுள்ளபடி, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை குறிப்பிடும் 32ஆவது சரத்தை மாற்றவும், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகளுக்கு மேல் அதிகரிக்கவும் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பு என்பது அவசியம்.
எனினும், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதாயின் மாத்திரம் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் பொது வாக்கெடுப்பு என்பது அவசியம் எனக் கூறி விவாதித்து வருகின்றனர்.
அதாவது, தற்போது 5 வருடங்களாக காணப்படும் பதவிக் காலத்தை ஆறு வருடங்களாக நீட்டிக்க பொதுவாக்கெடுப்பு இன்றி நடத்தலாம் என விவாதித்து வருகின்றனர்.
அரசியலமைப்பு கூறுவது என்ன?
1978 அரசியலமைப்பின் துணைப் பிரிவு 30 (2) தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஆறு வருட காலத்திற்கு பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேற்கண்ட ஆறு ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கும் சட்டமூலம் , நாடாளுமன்றத்தின் 2/3 வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும் வரை சட்டமாகாது என்று 83 (அ) கூறுகிறது.
இதன்படி, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ள சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களாகக் குறைக்கும் வகையில் 30(2)வது சரத்து திருத்தப்பட்டது.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பின் அங்கீகாரம் தேவைப்பட்ட போதிலும், 19 ஆவது திருத்தத்தின் போது, ஒரு வருடத்திற்கு பதவிக் காலத்தைக் குறைக்க பொதுவாக்கெடுப்பு தேவை என்று உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கவில்லை.
எனவே, இந்தத் திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம்; ஐந்தாண்டுகளாகக் குறைத்து அரசியல் சாசனம் திருத்தப்பட்டாலும் கூட ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்க நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கின் ஒப்புதலும் வாக்கெடுப்பும் தேவை என்று 83 (ஏ) சரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தற்போது அரசாங்கத்தின் அரசியலமைப்பில் ஐந்து ஆண்டுகள் ஆகும்,எனினும், உறுப்புரை 83, (a) இல் ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கான காலத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி பதவிக்கு 6 ஆண்டுகளுக்கு மேல் வகிக்க , நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கின் ஒப்புதலைப் பெற்று வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் ஆகும்.